மாநிலத்தின் நிதி தன்னாட்சியினை கருத்தில்கொண்டு பெட்ரோலிய பொருட்கள், மின்சாரத்தை ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது: ஜி.எஸ்.டி. கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

சென்னை: மாநிலத்தின் நிதி தன்னாட்சியினை கருத்தில் கொண்டு பெட்ரோலிய  பொருட்கள், மின்சாரத்தை ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கு  உட்படுத்த கூடாது என்று ஜி.எஸ்.டி. கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

37வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) மன்ற கூட்டம் கோவாவில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார், வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளர் பாலச்சந்திரன், வணிகவரி ஆணையர் சோமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: ஜி.எஸ்.டி. வருவாய் போதிய அளவிற்கு அதிகரிக்கும் பட்சத்தில் மற்றும் சுமுகமான பொருளாதார நிலை நிலவும் பட்சத்தில் ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை சீரமைப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான் பெட்ரோலிய பொருட்களின் மீது ஜி.எஸ்.டி. விதிக்கப்படாமல் உள்ளது.
Advertising
Advertising

மேலும் மின்சாரம் மீது ஜி.எஸ்.டி. வரிக்குட்படுத்துவது குறித்து 15வது நிதிக் குழு கருத்துரு தெரிவித்துள்ளது. ஆனால், மாநிலத்தின் நிதி தன்னாட்சியினை கருத்தில் கொண்டு பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மின்சாரம் ஆகியவை ஜி.எஸ்.டி.வரி விதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது.மாநிலங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத்  தொகை அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே. அதாவது 2022ம் ஆண்டு வரை வழங்கப்பட உள்ளது. மாநிலங்களுக்கு வரவேண்டிய வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, இந்த ஐந்தாண்டு காலம் முடிந்த பின்னரும் மாநிலங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் அல்லது அதற்கு மாற்றாக தற்போது விதிக்கப்பட்டு வரும் இழுப்பீடு வழங்குவதற்கான மேல் வரியினை ஜி.எஸ்.டி.வரி விகிதத்தோடு இணைத்திட வேண்டும்.

ஜி.எஸ்.டி. தொடர்பான மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களை மத்திய அரசு விரைந்து அமைத்திட வேண்டும். ரூ.2 கோடி வரை விற்பனை அளவு கொண்ட வணிகர்கள் ஆண்டு கணக்கு விவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டியதில்லை என சட்டக்குழு பரிந்துரைத்துள்ளது. ரூ.5 கோடி வரை ஆண்டு மொத்த தொகை உள்ள வரி செலுத்துவோர் ஆடிட் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டாம். புதிய படிவ விவர அறிக்கை தாக்கல் செய்யும் முறையை அமல்படுத்துதல் மற்றும் வரி திருப்புத் தொகையை ஒரே அதிகார அமைப்பு வழங்கிடுவது குறித்தான கருத்துருவை வரவேற்கிறேன். கைத்தறி பொருட்கள், கொள்கலனில் அடைக்கப்பட்டு வணிகச் சின்னம் இடப்பட்ட அரிசி மற்றும் இதர உணவு தானியங்கள், ஜவ்வரிசி, ஊறுகாய்,   வெண்ணெய்,  நெய், விவசாயக் கருவிகள், ஜவுளித் தொழிலில் பயன்படும்  இயந்திர பாகங்கள்,  பம்பு செட்டுகள்,  மீன்பிடி தொழிலுக்கான உபகரணங்கள்,  

மரவள்ளிக் கிழங்கு ஸ்டார்ச், வணிக சின்னமிடப்படாத நொறுக்கு  தீனிகள், பேக்கரி பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள், பல்வேறு வகையான வத்தல்கள், பிஸ்கட்கள், உரம், நுண் ஊட்டச் சத்துகள், பூச்சி கொல்லிகள் மற்றும் பூஞ்சை கொல்லிகள், கற்பூரம், காய்ந்த மிளகாய், வெந்தயம், தனியா, மஞ்சள் போன்றவை மற்றும் அதன் பொடிகள். சீயக்காய், கடித உறை, அட்டைகள், டைரிகள்  பயிற்சி குறிப்பு மற்றும் கணக்கு புத்தகம் போன்ற காகிதப் பொருட்கள். பாலியஸ்டர்/நாரினால் ஆன நெய்யப்படாத பைகள், காதிப் பொருட்கள், வெளுப்பதற்கான திரவம், பவானி தரைவிரிப்பு, மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக், வேப்பம் பிண்ணாக்கு, அரிசி தவிடு மீது வரி விலக்கு அல்லது எதிரிடை கட்டணமாக மாற்றல், வெள்ளி மெட்டி, தாலி போன்றவை; அலுமினிய பாத்திரங்கள் மற்றும் அலுமினிய கழிவுகள், பட்டு நூல் மற்றும் சரிகை, தேங்காய் நார் பொருட்கள், ரப்பர் கலந்த நாரினால் செய்யப்பட்ட மெத்தைகள்; பேக்கரியில் பயன்படும் ஈஸ்ட், சுருட்டு, கொள்கலனில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், கோயில்களில் உபயோகிக்கப்படும் வாகனம், தேர், திருவட்சி ஆகியவை;

மொறுமொறுப்பான ரொட்டித் துண்டு (ரஸ்க்), நன்னாரி சர்பத், பனஞ் சர்க்கரை, பப்பாளி மிட்டாய், காலர் துணி, சாம்பிராணி, பனைநார் மற்றும் மட்டைகள், கோரைப் பாய், பயோ டீசல், சல்லா துணி மற்றும் கட்டு போடும் துணி, துணி பை, மெழுகுவர்த்திகள், சங்கு மற்றும் கடல் சிப்பியாலான கைவினைப் பொருட்கள், கையால் செய்யப்பட்ட இரும்பு பெட்டி, கையால் செய்யப்பட்ட பூட்டு,  பனிக்கூழ் போல் குளிர் பானங்களையும் இணக்கமுறை வரிவிதிப்பில் எதிர்மறை பட்டியலில் சேர்த்தல். விவசாய நடவடிக்கைகள் தொடர்பான சேவைகளுக்கு வரி விலக்களித்தல், மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு விலக்களித்தல், சிட் நிதி சேவைகளுக்கு விலக்களித்தல், நெல் குற்றுகை சேவைகளுக்கு வரி விலக்களித்தல், நுண்நீர் பாசன கருவிகளுக்கு வரிவிலக்கு மற்றும் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கு வரி விலக்கு ஆகியவை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: