கோவை சூலூரில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் 2 பேர் மாயம்: மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியேறிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை: கோவை சூலூரில் பள்ளிக்கு சென்ற 2 மாணவர்கள் மயமானதை தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையை அடுத்த சூலூரில் விமானப்படையின் விமானத்தளம் இயங்கி வருகிறது. இந்த விமானதளத்தின் உள்ளே கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் விமானப்படை அதிகாரிகளின் குழந்தைகள் உட்பட அப்பகுதியில் இருக்கும் குழந்தைகளும் அப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், விமானப்படை அதிகாரிகளின் குழந்தைகள் 2 பேர் மயமானதாக தெரியவந்துள்ளது. கேதுல் மற்றும் வருண் என்ற மாணவர்கள் அப்பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.

நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றவர்கள், வகுப்புக்கு செல்லாமல் அங்கிருந்து வெளியே சென்றுள்ளனர். பள்ளிக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து, பள்ளி நேரம் முடிந்தும் இரண்டு மாணவர்களும் வீட்டுக்கு திரும்பவில்லை. இது தொடர்பாக, பள்ளிக்கு சென்று பெற்றோர்கள் கெட்டபோது அவர்கள் வகுப்புக்கு செல்லவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிவிட்டு, அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில், சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இரு மாணவர்களும் சைக்கிள் மூலம் பள்ளியில் இருந்து வெளிவரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், காலை 7.50 மணிக்கு அந்த மாணவர்கள் பள்ளியில் இருந்து திருப்பூர் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இதையடுத்து, காவல்துறை சார்பிலும், விமானப்படை அதிகாரிகள் சார்பிலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாணவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை, இரு மாணவர்களும் யாராலும் கடத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அவர்கள் பள்ளியை விட்டு ஏன் வெளியே சென்றார்கள்? எங்கே சென்றார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூலூர் ஏர் போர்சில் அமைத்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு உச்சகட்ட பாதுகாப்பு இருக்கும். அந்த பாதுகாப்பையும் மீறி எவ்வாறு மாணவர்கள் வெளிவந்துள்ளனர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: