ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட ரூ.30 கோடி நடராஜர் சிலை செப்.21ல் கல்லிடைக்குறிச்சி வருகை

அம்பை: nகல்லிடைக்குறிச்சி அறம் வளர்த்த நாயகி கோயிலில் இருந்து கடந்த  39 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளை போன சிலைகளின் ஒன்றான 2.5 அடி உயரமுள்ள  ரூ.30 கோடி மதிப்பிலான  ஐம்பொன் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்டு  சனிக்கிழமை கல்லிடைக்குறிச்சி வர உள்ளது. இதனால் அப்பகுதி பக்தர்கள் உற்சாக வரவேற்பளிக்க உள்ளனர். நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி-நெல்லை பிரதான சாலை அருகே 700 ஆண்டுகளை கடந்த அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் வழிபட்டு வந்த நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் மற்றும் ஸ்ரீபலிநாதர் சிலைகள் கடந்த 1982ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி கொள்ளை போயின. இது குறித்து கல்லிடைக்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு கண்டுபிடிக்க முடியாத வழக்கு என முடிக்கப்பட்டது.

அந்த சிலைகளில் கலை வண்ணத்தோடு இருந்த நடராஜர் சிலை வெளி நாட்டிற்கு சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் அந்த சிலையை கடந்த 2001 ஆகஸ்ட் 6ம் தேதி ஆர்ட் கேலரி ஆப் சவுத் ஆஸ்திரேலியா சுமார் ரூ.17 கோடிக்கு வாங்கி அங்குள்ள அருங்காட்சியத்தில் காட்சி படுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் பொயட்ரி இன்ஸ்டோன் ப்ராஜெக்ட் உள்ளிட்ட பல தன்னார்வ அமைப்புகளின் உதவியோடு அருங்காட்சியகத்தில் இருப்பது இந்திய சிலைதான் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இந்த வழக்கை எடுத்து விசாரித்தது. 16ம் நூற்றாண்டை சேர்ந்த 75.7 செ.மீ உயரமுள்ள நடராஜர் சிலையை அமெரிக்காவின் ஆலிவர் போர்ஜ் அண்டு பெரன்டன் லிங்க் என்ற நிறுவனத்திடம் இருந்து ஆஸ்திரேலியா அருங்காட்சியம் வாங்கி இருந்தது. பாண்டிச்சேரி ப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட் உதவியுடன் இது இந்திய சிலை தான் என்று உறுதிபடுத்தப்பட்டது.

அதோடு 1982ல் சிலை காணாமல் போனதும் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திடம் கொடுத்தனர். அதன் பிறகு தான் சிலையை மீட்க ஆஸ்திரேலியாவுக்கான இந்திய துணை கமிஷனர் மூலம் அருங்காட்சியகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மத்திய அரசு துணையுடன் ஆஸ்திரேலியா சென்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அந்நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பதிவாளர் ஜேன் ராபின்சன் மற்றும் ஜேம்ஸ் பென்னட் ஆகியோரிடம் 700 ஆண்டு பழமை வாய்ந்ததும் ரூ.30 கோடி மதிப்பிலானதுமான நடராஜர் சிலையை செப். 11ம் தேதி பெற்றனர். அங்கிருந்து விமானத்தில் டெல்லி கொண்டுவரப்பட்டு பின்னர் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செப். 13ம் தேதி வந்தது. அங்கு பூத கண வாத்தியங்கள் முழங்க நடராஜருக்கு வரவேற்பளிக்கப்பட்டு ரயில் நிலையத்திலே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பின் அங்கு வந்த நெல்லை உதவி ஆணையாளர் சங்கர் தலைமையில் கோயில் செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன், அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் நடராஜன், தங்கப்பன், வெங்கட்ராமன், கணக்காளர் காந்திமதிநாதன் ஆகியோர் சிலையின் அடையாளங்களை கண்டறிந்து கல்லிடைக்குறிச்சியில் இருந்து கடத்தப்பட்ட சிலை இதுதான் என உறுதி செய்தனர். பின்னர் திருச்சியில் செயல்படும் சிலை கடத்தல் தடுப்பு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பூஜை செய்யப்பட்டு வரப்படுகிறது. வரும் செப். 20ம் தேதி கும்கோணம் சிலை தடுப்பு சிறப்பு பிரிவு தனி நீதிமன்றத்திற்கு நடராஜர் சிலை கொண்டு செல்லப்பட்டு நீதிமன்ற உத்தரவு படி அங்கிருந்து செப்.21ம் தேதி கல்லிடைக்குறிச்சி கோயிலுக்கு பாதுகாப்புடன் கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சுவாமி நடராஜர் சிலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பக்தர்கள் ஆவலோடு உள்ளனர்.

Related Stories: