அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்ற காங்கிரசாரால் பரபரப்பு

சென்னை:அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை விமர்ச்சித்து தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து ஒன்றை தெரிவித்தார். இது காங்கிரசார் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நேற்று தமிழகம் முழுவதும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துமனையில் சிகிச்சை அளிக்க கோரி மனு கொடுக்க சென்றதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாஷா தலைமையில் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மோகன் காந்தி, ஜியாவுல்லா, சாதிக் பாஷா, அர்ஷத், ஆரீப் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட காங்கிரசார் நேற்று கீழ்ப்பாக்கம் மனநல மருத்துமனைக்கு சென்றனர். அங்கு மருத்துவமனை இயக்குனரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

Advertising
Advertising

அந்த மனுவில், ‘‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி பற்றி தரக்குறைவாக பேசியிருக்கிறார். அமைச்சரின் நடவடிக்கைகளை பார்த்தால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்றுள்ளது. எனவே அவரை தங்களது மருத்துவமனையில் அனுமதித்து தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. இதை பார்த்த மருத்துமவனை நிர்வாகத்தினர் மனுவை வாங்க மறுத்தனர்.மனுவை பெற்றுக் கொள்ளும்படி காங்கிரசார் வலியுறுத்தியதால் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து நீதிமன்றம் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்று கூறி காங்கிரசார் கலைந்து சென்றனர்.

Related Stories: