தென் ஆப்ரிக்கா ஏ ரன் குவிக்க திணறல்

மைசூரு: இந்தியா ஏ அணியுடனான 2வது டெஸ்டில் (அதிகாரப்பூர்வமற்றது), தென் ஆப்ரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறது.மைசூரு, நரசிம்ம ராஜா மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில் (4 நாள்), டாசில் வென்ற தென் ஆப்ரிக்கா ஏ அணி முதலில் பந்துவீசியது. இந்தியா ஏ அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன் (74 ஓவர்)  எடுத்திருந்தது. ஷுப்மான் கில் 92 ரன் விளாசி பெவிலியன் திரும்பினார்.கருண் நாயர் 78 ரன், கேப்டன் விருத்திமான் சாஹா 36 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். கருண் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். சாஹா 60 ரன்  (126 பந்து, 8 பவுண்டரி), ஷிவம் துபே 68 ரன் (84 பந்து, 10  பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். குல்தீப் 2, நதீம் 11, உமேஷ் 24 ரன் எடுக்க, இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 417 ரன் குவித்து ஆல் அவுட்டானது (123 ஓவர்).  ஜலஜ் சக்சேனா 48 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா ஏ அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்துள்ளது. மாலன் 6, டி புருயின் 41, ஸோண்டோ 5, முத்துசாமி 12, கிளாசன் 2 ரன்னில் வெளியேறினர். தொடக்க வீரரும் கேப்டனுமான  மார்க்ராம் 83 ரன், முல்டர் 9 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்தியா ஏ பந்துவீச்சில் குல்தீப், நதீம் தலா 2, சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 5 விக்கெட் இருக்க, தென் ஆப்ரிக்கா ஏ அணி இன்னும் 258 ரன் பின்தங்கியுள்ள நிலையில், இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Related Stories: