காவேரி கூக்குரல்’ இயக்கம் நிறைவு: தாலுகா தோறும் 500 விவசாயிகள் வேளாண் காடுமுறைக்கு மாற்றம்... சத்குரு ஜகிவாசுதேவ் பேச்சு

கோவை: ‘காவேரி கூக்குரல்’ இயக்கம் நிறைவுபெற்றதை தொடர்ந்து, சத்குரு ஜகிவாசுதேவுக்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி கோவையில் நடந்தது. இதில் பேசிய அவர், ஒவ்வொரு தாலுகாவிலும் 500 விவசாயிகளை வேளாண் காடு முறைக்கு மாற்ற விரும்புகிறோம் எனக் கூறினார். கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் சத்குரு ஜகிவாசுதேவ், தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவேரி ஆற்றுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் ‘காவேரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை துவங்கினார். இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், காவேரி நதிபடுகையில் 242 கோடி மரங்கள் நடவும், இதற்காக நிதி திரட்டவும் காவோி உற்பத்தியாகும் இடமான தலைக்காவோியில் இருந்து கடந்த 3ம் தேதி வாகன பேரணியை துவங்கினார்.

அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக கடந்த 13 நாட்களாக நடந்த பேரணி 3500 கிமீ. தூரத்தை கடந்து சென்னையில் கடந்த 15ம் தேதி நிறைவடைந்தது. இதற்காக கோவை கொடிசியாவில் சத்குரு ஜகிவாசுதேவுக்கு கோவையின் முக்கிய பிரமுகர்கள் நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. முன்னதாக கொடிசியா வரை சத்குரு ஜகிவாசுதேவ் தலைமையில் பிரமாண்டமான வாகன பேரணி நடத்தப்பட்டது. இந்திய தொழில் வர்த்தக சபை, கொடிசியா, சிபாகா, கிரெடாய், கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம், சிறுவாணி இயக்கம், வனம் அறக்கட்டளை உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் மற்றும் சமூக சுற்றுச்சூழல் இயக்கங்கள் இணைந்து நடத்திய விழாவிற்கு பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார்.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் கிருஷ்ணன், கங்கா மருத்துவமனை இயக்குநர் ராஜசேகர் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.  சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கொமதேக ஈஸ்வரன், கொடிசியா ராமமூர்த்தி, ரூட்ஸ் ராமசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சத்குரு பேசும்போது, ‘‘12 ஆயிரம் ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் வரலாறு நம் தென்னிந்தியாவுக்கு உள்ளது. தமிழ் கலாசாரம், விவசாயிகளால் வளர்ந்த கலாசாரம். அரசர்களாலோ, மேதைகளாலோ இந்த கலாசாரம் வளரவில்லை. அடுத்த கட்டமாக காவேரி கூக்குரல் இயக்கத்துக்காக கர்நாடகா முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளேன். ஒவ்வொரு தாலுகாவிலும் 250 முதல் 500 விவசாயிகளை வேளாண் காடுமுறைக்கு மாற்ற வேண்டும் என்று விரும்புகிறோம்’’ என்றார்.

Related Stories: