குச்சனூரில் 5 மாதமாக தரை மட்டமாகி கிடக்கும் ஊராட்சி துவக்கப்பள்ளி

சின்னமனூர்: தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ்சின் தொகுதியான குச்சனூரில் 5 மாதங்களாக தரைமட்டமாக கிடக்கும் துவக்கப்பள்ளியால் மாணவர்களும், ஆசிரியர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சி உள்ளது. இங்கு போடி விலக்கில் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 1972ம் ஆண்டு துவக்கப்பட்டு 47 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். வகுப்பறைகள் சேதமடைந்து கிடப்பதால் மழைக்காலங்களில் மழைநீரில் மாணவர்களும், ஆசிரியர்களும் நனையும் அவலம் தொடர்ந்தது. இதனால் புதிய வகுப்பறைகள் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்கு விரைவாக நிதி ஒதுக்கப்படுவதாக அரசு உறுதி அளித்தது.

இதனைநம்பி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பழுதான கட்டிடங்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. வளாகத்திலுள்ள பயன்படுத்தாத பழமையான வகுப்பறைகளை திறந்து அதில் தற்போது ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் இடியும் அபாயம் உள்ளதால் அச்சத்துடன் ஆசிரியர்கள் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்துகிறார்கள். பீதியுடன் மாணவர்கள் பாடம் கற்று வருகின்றனர். அரசின் நிதி வந்து சேராததால் 3 வகுப்பறைகள் கட்டுமான பணிகள் இன்னும் துவக்கப்படாமல் திறந்த நிலையில் பாது காப்பு இல்லாமல் கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் குடிமகன்களின் பாராகவும் மாறி வருகிறது. மழை பெய்தால் மாணவர்கள் நினையும் நிலை உள்ளது. கடந்த ஆக.8ம் தேதி பெய்த கனமழையில் மேற்கூரை நிரம்பி மழை கொட்டியதில் மாணவர்கள், ஆசிரியர்கள் வகுப்பறையை விட்டு வெளியே வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் போடி விலக்கு பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் சமாதானம் செய்து பள்ளி கட்டிடப்பணி விரைவில் துவங்கப்படும் என அறிவித்தார். ஆனால், இன்றுவரை நிதி ஒதுக்கி பணிகள் துவங்கவில்லை. தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியில் ஒரு துவக்கப்பள்ளி இப்படியான துயர நிலையில் இருந்தும் அவர் கண்டு கொள்ளமால் இருப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இத்தொகுதியை சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Related Stories: