துறையூர் பஸ் நிலையத்தில் செயல்படாத காவல் உதவி மையம்

துறையூர்: துறையூர் பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையம் செயல்படாத நிலையில் உள்ளது. துறையூர் பஸ் நிலையத்தை சுற்றி திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற குற்றங்களை தடுப்பதற்கு 10க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு அறையாக இந்த காவல் உதவி மையம் செயல்பட்டது. பஸ் ஏறும்போது இறங்கும்போது ஏதாவது குற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக தெரிவிப்பதற்கு மாவட்ட எஸ்பி நேரடி பார்வையில் இந்த மையம் அமைக்கப்பட்டது. இந்த காவல் உதவி மையத்தை 10 ஆண்டுக்கு முன்பு அப்போதைய எஸ்.பி., ராஜேஸ்வரி திறந்து வைத்தார். இது ஒரு ஓரிரு ஆண்டுகள் மட்டுமே நடைமுறையில் இருந்தது. பிறகு தற்போது அது முழு பயன்பாடு இல்லாமல் போனதால் காவல் உதவி மையம் பூட்டப்பட்டு முன்பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டது.

கேமராக்கள் உடைந்து தொங்கிக்கொண்டு உள்ளது. இதை பார்த்தாலே திருடர்கள் தங்கள் கை வரிசையை காட்ட வசதியாவிடும். விசேஷ நாட்களில் பஸ் நிலையத்தில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நடைபெற்று வரும் சூழல் நிலவி வருகிறது. இந்த காவல் உதவி மையம் செயல்படாமல் இருப்பது இப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே மாவட்ட எஸ்பி உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த காவல் உதவி மையத்தை திறந்து அதற்கு என போலீசார் நியமிக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துறையூர் காவல் நிலையத்துக்கு 2 எஸ்ஐ தான்...

துறையூர் காவல் நிலையம் 90 ஆண்டுக்கு முன்பு திறந்தபோது 53 போலீசார் இருந்தனர். தற்போதும் கணக்கில் 53 போலீசார் மட்டும் உள்ளனர். பல வருடங்களாக போலீசார் பற்றாக்குறையாக உள்ளது. 100க்கும் மேற்பட்ட கிராமத்தை பாதுகாக்கும் துறையூர் காவல் நிலையத்தில் 2 எஸ்ஐ மட்டுமே உள்ளனர். இதனால் வழக்குகளை விசாரிக்க முடியாமல் காலதாமதம் ஆகிறது. எனவே அதிகமான போலீசாரை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: