காகம் சோறு சாப்பிடாததால் காரியம் நடத்த 2 மணி நேரம் காத்திருந்த கிராம மக்கள்

சின்னசேலம்: காகம் சோறு சாப்பிட்டால் தான் இறந்தவர்களுக்கான  கரும காரியம் நடக்கும் விநோத சம்பவம் கல்வராயன்மலையடிவார கிராமங்களில்  இன்றளவும் நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம்  கல்வராயன்மலையடிவாரத்தில் கச்சிராயபாளையம் அருகே உள்ள ஏர்வாய்பட்டினம்  ஊராட்சியில் போயர் இனத்தை சேர்ந்த சுமார் 60  குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கிணறு வெட்டும் தொழிலையே பிரதானமாக செய்து  வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பகுதியில் வசித்து வந்த ரங்கன்(50)  என்பவர் கடந்த வாரம் இறந்து விட்டார். அவருக்கான ஈமச்சடங்கு நடத்த அவரது  குடும்பத்தினர், உறவினர்கள் முடிவு செய்தனர். ஆனால் அதற்கு முன்னதாக அசைவ சோறு சமைத்து காகத்திற்கு வைப்பதும், அது சாப்பிட்டால் தான் காரியம்  நடத்துவது, இல்லை என்றால் தொடர்ந்து விதவிதமான சோறு சமைத்து வைப்பது என்பது  அவர்களது குல வழக்கமாகும். இதையடுத்து இறந்துபோன ரங்கன்  குடும்பத்தை சேர்ந்த ஆண், பெண் என 200பேர் கும்பலாக வந்து, நேற்று காலை  சுமார் 6 மணியளவில் அக்கராயபாளையம் குன்றின் அருகில் உள்ள சமதள  நிலப்பரப்பில் சோறு சமைத்து காகத்திற்கு வாழை இலையில் வைத்தனர். சோறு  வைத்து சுமார் 2 மணி நேரமாகியும் எந்த காகமும் அந்த சோற்றை சாப்பிட  வரவில்லை. இதனால் காத்திருந்த மக்கள், உறவினர்கள் சோர்வடைந்தனர். சிலர் கலைந்தும் சென்றனர். ஆனால் பெரும்பாலோர்  ஏக்கத்துடன் காகங்களின் வருகைக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில்  சுமார் 8.25 மணியின்போது 2 காகங்கள் வந்து வாழை இலையில் வைத்த சோற்றை  சாப்பிட ஆரம்பித்தது. இதையடுத்து காத்திருந்த 200க்கும் மேற்பட்ட மக்கள்  மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர். இதுகுறித்து பெரியவர் ஒருவர் கூறுகையில், எங்கள் குல வழக்கப்படி  குடும்பத்தில் ஒருவர் இறந்தால் கரும காரியம் செய்வதற்கு முன்னர்  காகத்திற்கு சோறு சமைத்து வாழை இலையில் வைப்போம். அது சாப்பிட்டு விட்டால்  நாங்கள் வீட்டிற்கு சென்று கெடா வெட்டி காரியம் செய்வோம். காகம்  சாப்பிடவில்லை என்றால் விதவிதமான சோறு சமைத்து வைத்து காகம் சாப்பிடும் வரை காத்திருப்போம். சோறு வைக்கும்போது காகம் சாப்பிட  வரவில்லை என்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் ஏதோ தவறு செய்து விட்டதாக  கருதுவோம். அதன்பிறகு அவர்கள் விழுந்து கும்பிட்டு தவறு செய்திருந்தால்  மன்னித்து கொள்ளுங்கள் என்று வேண்டுவர் என்றார்.

Related Stories: