டி.கே.சிவக்குமாரை மேலும் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கோரி அமலாக்கப்பிரிவு மனுதாக்கல்

புதுடெல்லி: டி.கே.சிவக்குமாரை மேலும் 5 நாள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 4 முதல் இன்று வரை டி.கே.சிவகுமாரை காவலில் வைத்து 10 நாட்கள் அமலாக்கப்பிரிவு விசாரித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விசாரணைக்கு டி.கே.சிவக்குமார் ஒத்துழைக்கவில்லை என நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு புகார் தெரிவித்துள்ளது. மேலும் டி.கே.சிவக்குமார் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக அமலாக்கப்பிரிவு நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை கடந்த 3ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக கடந்த ஆண்டு சிவக்குமார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்ட சிவகுமாரிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிவகுமாரை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவையும், சிவக்குமாரின் சகோதரர் சுரேஷ் ஆகியோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனிடையே, சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யாவிடம் அமலாக்கத் துறையினர் 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இன்றும் விசாரணைக்கு ஆஜராக அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, சிகிச்சை முடிந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக டெல்லி துக்ளக் சாலையில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் சிவகுமாரை தற்காலிகமாக சிறை வைத்தனர். மேலும் அவரது காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், சிவக்குமார் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது, விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்ததால், அவருக்கு ஜாமின் வழங்க கோரி அவரது தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், சிவகுமாரிடம் இன்னும் விசாரணை நடத்தவுள்ளதால் மேலும் 5 நாட்களுக்கு சிவக்குமாரை தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளது.

Related Stories: