பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம் : சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டை, பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ (23). துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை 3 மணி அளவில் வேலை முடித்து தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டார். குரோம்பேட்டை - துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அதிமுக பிரமுகரான காஞ்சி கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜெயகோபால் மகன் திருமண பேனர் பல கி.மீ.க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை வரவேற்று வரிசையாக வைக்கப்பட்டிருந்தது.

ரேடியல் சாலையில் ஸ்கூட்டரில் சுபஸ்ரீ வந்தபோது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனரில் ஒன்று, திடீர் என அவர் மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ ஸ்கூட்டியில் இருந்து கீழே சாலையில் விழுந்தார். அப்போது கோவிலம்பாக்கம் நோக்கி சென்ற தண்ணீர் லாரி கீழே விழுந்து கிடந்த சுபஸ்ரீ மற்றும் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. லாரியின் முன்பக்கம் சிக்கிய அவரது ஸ்கூட்டர் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது.

லாரியின் முன்பக்கத்தில் சிக்கிய சுபஸ்ரீயின் உடல் மற்றும் தலையின் மீது ஏறிய பிறகுதான் லாரி நின்றது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக வழக்கறிஞர் லட்சுமிநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாய்  அமர்வு முன் வந்தது.

அப்போது பேனர்களால் ஏற்படும் விபத்துக்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு கொடுத்தால் பிரச்னை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறார் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தலைமை செயலகத்தை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதை தவிர மற்ற அனைத்து உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்த நீதிபதிகள், உயர்நீதிமன்றம் எத்தனையோ உத்தரவுகளை பிறப்பித்த பிறகும் அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு விசுவாசமாகவே உள்ளதாக கண்டனம் தெரிவித்தனர். அதிகாரிகள் ரத்தம் உறிஞ்சுபவர்களாகவே இருக்கிறார் என்று தெரிவித்தனர்.

Related Stories: