கொடைக்கானலில் மூடிக்கிடக்கும் கிளை சிறைச்சாலை

*சிறு குற்றவாளிகள் கூட மதுரைக்கு ‘பார்சல்’

கொடைக்கானல் : கொடைக்கானலில் மூடப்பட்ட கிளை சிறைச்சாலையை உடனடியாக திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கொடைக்கானல் நகரில் அண்ணா சாலை பகுதியில் தாலுகா அலுவலகம் அருகே கிளை சிறைச்சாலை செயல்பட்டு வந்தது. இங்கு சிறு குற்றங்களில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டு வந்தனர். மேலும் இரவு நேரத்தில் கைது செய்யப்படும் குற்றவாளிகளும் இந்த கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு காலையில் வேறு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தனர்.

இதனிடையே இந்த சிறைச்சாலைக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் காம்பவுண்டு சுவர் இல்லை என்றும் கடந்த சில ஆண்டுக்கு முன்பு செயல்படாமல் மூடப்பட்டது. சுமார் 10 குற்றவாளிகள் வரை அடைக்கப்பட வேண்டிய இந்த சிறைச்சாலையினை மூடியதன் காரணமாக சிறு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கூட மதுரை, திண்டுக்கல் நகரங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இதனால் போலீசாருக்கு அதிக சிரமம் ஏற்படுவதோடு பணிச்சுமையும் அதிகரிக்கின்றது. மேலும் குற்றவாளிகளின் உறவினர்கள் அவர்களை காண்பதற்கோ அல்லது ஜாமீன் எடுப்பதற்கோ வெளியூரில் உள்ள சிறைச்சாலைக்கு சென்று வருவதற்கு கடும் சிரமம் அடைகின்றனர்.

எனவே தற்போது மூடப்பட்ட சிறைச்சாலையை மீண்டும் திறக்க வேண்டும். அத்துடன் சிறைச்சாலைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மூடப்பட்ட இந்தக் கிளை சிறைச்சாலையில் போதுமான அளவு போலீசாரும் ஜெயில் வார்டன் உள்ளிட்டவர்களும் பணியில் உள்ளனர். ஆனால் சிறைச்சாலை தான் செயல்படவில்லை. எனவே சிறை செயல்பட சிறைத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: