கொள்ளிடம் வழியாக வெளியேறும் காவிரி நீர் 36,000 கனஅடி வீணாக கடலில் கலப்பு

திருச்சி: கொள்ளிடம் வழியாக திறந்துவிடப்படும் 36 ஆயிரம் கனஅடி நீரும் வீணாக கடலில் கலக்கிறது. கால்வாய்களில் தூர்வாராததால் இந்த அவலம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.  மேட்டூர் அணை கடந்த 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காக திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 101.220 அடியாக இருந்தது. அணைக்கு 2.53லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது. அணை நிரம்பி விடும் என எதிர்பார்த்த நிலையில் கர்நாடகம், மற்றும் கேரளாவில் மழையின் வேகம் குறைந்து விட்டதால் அணை நிரம்பவில்லை. இந்நிலையில், டெல்டா பாசனத்துக்கு அதிக தண்ணீர் தேவைப்பட்டதால் கடந்த 1ம் தேதி மாலையில் இருந்து விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து  திறக்கப்பட்டது. இதனால் நீர்மட்டம் மளமளவென சரிந்த நிலையில் மீண்டும் கேரளாவிலும், கர்நாடகத்திலும் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டது.

இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 7ம் தேதி விநாடிக்கு 73 ஆயிரம் கனஅடி வந்தது. இதையடுத்து அன்று மதியம் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து, நீர்மட்டம் அதிக அளவில் வந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் முக்கொம்பு வந்ததும் அங்கிருந்து பாதுகாப்பு கருதி கொள்ளிடத்தில் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கொள்ளிடம் வழியாக அணைக்கரை சென்றுகொண்டிருக்கிறது. மேட்டூர் அணை: கர்நாடகா மற்றும் கேரளாவில் மழை குறைந்துள்ளதை தொடர்ந்து, அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் 69 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

எனினும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து 6வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 73 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 66 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இதனிடையே, அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு, நேற்று இரவு 65 ஆயிரம் கனஅடியில் இருந்து 70 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 900 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 120.89 அடி, நீர் இருப்பு 94.89 டிஎம்சி. இந்நிலையில் முக்கொம்பில் இருந்து காவிரியில் நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு  35ஆயிரம் கனஅடியும், முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் 24 ஆயிரம்  கனஅடி தண்ணீரும், கல்லணையில் இருந்த கொள்ளிடத்தில் 12,000 கனஅடியும்  திறக்கப்பட்டது. அதாவது கொள்ளிடத்தில் விநாடிக்கு 36,000 கனஅடி நீர்  திறக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் அணைக்கரை சென்று அங்கிருந்து கடலுக்கு செல்லும் நிலை உருவாகி உள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது கொள்ளிடம் வழியாக 227 டிஎம்சிக்கு அதிகமாக தண்ணீர் கடலுக்கு திறக்கப்பட்டது. இந்த ஆண்டும் கடலுக்கு தண்ணீர் திறந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை இன்னும் 5தினங்களுக்கு நீடிக்கும் என தெரிகிறது. அதே நேரத்தில் காவிரி டெல்டாவின் பெரும்பாலான கடைமடை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வராத நிலையே நீடிக்கிறது. இதற்கு காரணம் தூர்வாரும் பணி, மராமத்து பணி சரிவர நடைபெறாததுதான் என விவசாயிகள் தெரிவித்தனர்.

கல்லணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 9,029 கனஅடியும், வெண்ணாற்றில் 9,017 கனஅடியும், கல்லணை கால்வாயில் 3,004 கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கரையில் இருந்து வீராணம் ஏரிக்கு அதிக அளவு தண்ணீர் சென்றதால் இப்போது வீராணம் ஏரியும் நிரம்பி வழிகிறது. இன்னும் ஓரிரு நாளில் வீராணம் ஏரி பாசனத்திற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மராமத்து பணி நடைபெற்று வருவதால் தண்ணீரை பாசன வாய்க்கால்களில் திறந்து விட அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். மராமத்து பணியை ஒவ்வொருவருடமும் கோடைக்காலத்தில் நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக தண்ணீர் திறந்து விடும் நிலையில், நடைபெறும் மராமத்து பணிகள் விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது.

காலம் கடந்து பயிரிட்டால் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் சாகுபடி முறையாக நடைபெறுமா என்ற அச்சமும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. காவிரியிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், பாசனத்திற்கு இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories: