பசுமாட்டு சாணம், கோமியம் தொடர்பாக தொழில் தொடங்குவோருக்கு 60% நிதி உதவி: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: பசுமாட்டு சாணம், சிறுநீர் தொடர்பாக தொழில் தொடங்குவோருக்கு 60 சதவீதம் வரை நிதி உதவி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பால் பொருட்களைத் தவிர்த்து பசுமாட்டுச் சாணம் மற்றும் பசுமாட்டு சிறுநீர் போன்றவற்றையும் சந்தைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக வேளாண் துறையின் கீழ் ராஷ்டிரிய காமதேனு ஆயோக் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ராஷ்டிரிய காமதேனு ஆயோக்கின் தலைவராக வல்லாப் கத்திரியா என்பவர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பசுமாட்டுச் சாணம், சிறுநீர் போன்றவை மருத்துவம் மற்றும் விவசாயத்துக்கு பெரிதும் பயன்படுவதால் அவை தொடர்பாக தொழில் தொடங்குவோருக்கு 60 சதவீதம் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தார். இதை தொடர்ந்து பசு மாட்டின் கழிவுகளில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உதவிகள் செய்யப்படும் என்றும், ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் கோசாலைகளில், பசு வளர்போருக்கும் மற்றும் உரிமையாளர்களுக்கும் திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படும் என்றும்  வல்லாப் கத்திரியா கூறியுள்ளார். இதன் மூலம் பால் கொடுப்பதை நிறுத்தும் பசுக்கள் நிராகரிக்கப்படுவது தடுக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இளைஞர்கள் பால், நெய், வெண்ணெய் போன்ற பால் சார்ந்த பொருட்களை தயாரிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டக் கூடாது எனவும், அவர்கள் மாட்டுசாணம், மாட்டின் சிறுநீர் கொண்டு தயாரிக்கப்படும் மருத்துவ, விவசாய பொருட்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுவதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் உள்நாட்டு இன பசுக்கள் நிறைந்த அரியானா, உத்திரபிரதேசம், ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை ஒருங்கிணைத்து பசு சுற்றுலா சர்கியூட் உருவாக்கப்படும் திட்டத்தையும் அவர் அறிவித்தார்.

Related Stories: