புதுடெல்லி: கடன்களுக்கான வட்டி விகிதத்தை நாளை முதல் 0.1% குறைப்பதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. டெபாசிட்டுகளுக்கு அளிக்கும் வட்டிவிகித அடிப்படையிலான கடன் வட்டி விகிதத்தை எம்.பி.ஐ குறைத்துள்ளது. அதன்படி, கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 8.25 சதவீதத்தில் இருந்து 8.15% குறைத்து அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.75 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாக குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. கடந்த பிப்ரவரி, ஏப்ரல், ஜூன் மாதங்களில் 3 முறை ரெப்போ வட்டியைக் குறைத்த ரிசர்வ் வங்கி, 4-வது முறையாக கடந்த மாதமும் ரெப்போ வட்டியைக் குறைத்திருக்கிறது. ரெப்போ வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கியிடமிருந்து வணிக வங்கிகள் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் போது சேர்த்துச் செலுத்த வேண்டிய வட்டியாகும். ரெப்போ வட்டி விகிதம் குறையும்போது வணிக வங்கிகளுக்கு ஏற்படும் செலவினங்களும் குறையும்.