சென்னை: ஆவின் நிறுவனத்தின் அழிவை தடுத்து நிறுத்த முதல்வர், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆவின் முகவர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை லிட்டருக்கு 50பைசா உயர்த்தி ஆவின் பாலிற்கான மொத்த கமிஷன் தொகை லிட்டருக்கு ₹2 எனவும், அந்த தொகை மொத்த விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் சில்லரை வணிகர்களுக்கும் என குறிப்பிட்டு பொதுமக்களுக்கு ஆவின் பாலினை தங்குதடையின்றி விநியோகம் செய்யும் பால் முகவர்களை புறக்கணித்து உயரதிகாரி உத்தரவிட்டுள்ளார்.தற்போதுள்ள 65 மொத்த விநியோகஸ்தர்களில் பெரும்பாலானவர்கள் உயர்த்தப்பட்டுள்ள 50பைசா கமிஷன் தொகையில் 15பைசா முதல் 25பைசா வரை ஆவின் அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் லஞ்சமாக கொடுக்க வேண்டியதிருப்பதால் அதனை உங்களுக்கு தர முடியாது என உயர்த்தப்பட்ட கமிஷன் தொகையை பால் முகவர்களுக்கு தர மறுத்து வருகின்றனர்.
