திருப்பதி நகரில் ரூ.₹1000 கோடி மதிப்புள்ள 188 ஏக்கர் நிலம் தேவஸ்தானத்திற்கே சொந்தம்: 74 ஆண்டு கால போராட்டத்திற்கு முடிவு

திருமலை: திருப்பதி நகரில் ₹1000 கோடி மதிப்புள்ள 188 ஏக்கர் நிலம் தேவஸ்தானத்திற்கே சொந்தம் என்று 74 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பின் சித்தூர் இனாம் தாசில்தார் உத்தரவிட்டார். திருப்பதி ஏழுமலையான் கோயில், பெருமாளின் வைபவம் குறித்து  32,000 சங்கீர்த்தனைகளை எழுதி பாடியவர் தாலப்பாக்கம் அன்னமய்யா. இவர் வம்சா வழியினருக்கு அன்னமய்யாவின் திவ்ய நாம சங்கீர்த்தமன் கைங்கரியத்திற்காக கடந்த  1865ம் ஆண்டு அப்போதைய ஏழுமலையான் கோயில் நிர்வாகம், தற்போதைய திருப்பதி மத்திய பஸ் நிலையத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள 188 ஏக்கர் நிலத்தை வழங்கியது. இந்நிலையில் கடந்த 1940ம் ஆண்டு அன்னமய்யா திவ்ய நாம சங்கீர்த்தனம் கைங்கரியம் முடிவடைந்தது. இதையடுத்து கோயில் நிர்வாகம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 188 ஏக்கர் நிலத்தை அன்னமய்யாவின் வாரிசுகள் தேவஸ்தானத்திற்கு திருப்பி ஒப்படைக்க வேண்டும். ஆனால் அன்னமய்யா வாரிசுகள் 188 ஏக்கர் நிலத்தை, திருப்பதியை சேர்ந்த குருவா ரெட்டி என்பவரிடம் ஒப்படைத்தனர். அவர் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்திய மொத்த நிலத்தையும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பட்டா போட்டு கொண்டார்.

இதனால், 1940ம் ஆண்டு தேவஸ்தான நிர்வாகத்தினர் 188 ஏக்கர் நிலமும் தேவஸ்தானத்திற்கு சொந்தமானது என்று உத்தரவிடக்கோரி சித்தூர் இனாம் தாசில்தாரிடம் முறையிட்டனர். இந்த நிலம் தொடர்பான சட்ட போராட்டம் சித்தூர் இனாம் தாசில்தார் முன்னிலையில் 1945ம் ஆண்டு முதல்  நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி தாலப்பாக்கம் அன்னமய்யாவுக்கு 1865ம் ஆண்டு கோயில் நிர்வாகம் திவ்ய நாம சங்கீர்த்தனம் கைங்கர்ய சேவைக்காக வழங்கிய 188 ஏக்கர் நிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமானது என்று இனாம் தாசில்தார் தெரிவித்தார். இதனால் சுமார் 74 ஆண்டு கால போராட்டத்திற்குப் பின் ₹1000 கோடி மதிப்புள்ள 188 ஏக்கர் நிலமும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாகி உள்ளது. தற்போது அந்த 188 ஏக்கர் மொத்த நிலத்திலும் திருப்பதி மத்திய பஸ் நிலையம்,  ஏராளமான வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், லாட்ஜ்கள், வணிக நிறுவனங்களாக மாறி உள்ளன. எனவே அவற்றை காலிசெய்து நிலத்தை கையகப்படுத்த வேண்டிய அவசியம் தேவஸ்தானத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

போலி வெப்சைட்கள் மீது நடவடிக்கை

திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் நேற்று முன்தினம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக ஆந்திரா வங்கி சார்பில் தங்கம் மற்றும் வெள்ளி டாலர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுவாமி டாலர் பக்தர்களிடமிருந்து டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்ய 2 சதவீதம் சர்வீஸ் சார்ஜ் பெறப்படுகிறது. இந்த சர்வீஸ் சார்ஜ் கடந்த 6ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா அருங்காட்சியகத்தில் 3டி இமேஜ் முறையில் முப்பரிமாண வடிவில் சுவாமி நகைகளை வைப்பதற்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருப்பதி தேவஸ்தானம் என்ற பெயரில் பக்தர்களை ஏமாற்றி வரக்கூடிய போலி வெப்சைட்களை கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: