தீவிரவாதிகளுக்கு சென்ற மர்ம செய்தி `ஆப்பிள் சென்றதா, வளையல் அனுப்பவா?’: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பரபரப்பு தகவல்

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று அளித்த பேட்டி:காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 நீக்கத்திற்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மிக சிலரே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.  சட்டப் பிரிவு 370 சிறப்பு அந்தஸ்து அல்ல, மாறாக சிறப்பு பாகுபாடு காட்டுவதாகும். இது நீக்கப்பட்டதன் மூலம் காஷ்மீர் மக்களும் இதர இந்தியர்களுடன் சரி சமமாக்கப்பட்டுள்ளனர். இதனை வைத்து அரசியல் தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டு  பணம் சம்பாதித்து வந்தனர். சாதாரண மக்களை பொருத்தவரை சிறப்பு அந்தஸ்து என்பது ஒன்றுமில்லை. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை மாநில போலீசார், மத்திய படையினரே கையாளுகின்றனர். அங்கு ராணுவத்தினரின் அடக்குமுறை, கட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லையை கண்காணிக்கவும் தேவைப்பட்டால் போர் தொடுக்கவும்  மட்டுமே ராணுவத்தினர் குவிக்கப்படுகின்றனரே தவிர மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு அல்ல.ஜம்மு காஷ்மீரில் உள்ள 199 காவல் மாவட்டங்களில், 10 மாவட்டங்களில் மட்டுமே கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை. பிற மாவட்டங்களில் எந்த தடைகளும் விதிக்கப்படவில்லை. ஏறக்குறைய 92.5 சதவீத பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக்கி  கொள்ளப்பட்டுள்ளது. அங்குள்ள தரைவழி தொலைத் தொடர்பு வசதி முழுமையாக  செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

காஷ்மீரில் பிரச்னையை உருவாக்க வேண்டுமென்று பாகிஸ்தான் இந்தியாவுக்கு தீவிரவாதிகளை அனுப்பி வருகிறது. அமைதியை சீர்குலைக்க அவர்கள் பயன்படுத்தும் ஒரே கருவி தீவிரவாதம் மட்டுமே. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்  இருந்து இதுவரை 230 தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் பஞ்சாபி மொழி பேசும் இரண்டு தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொலைத் தொடர்பு கோபுரங்களில் இருந்து சங்கேத வார்த்தைகள் அனுப்பப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை இடைமறித்து கேட்டதில், `எப்படி அதிகளவு  ஆப்பிள்கள் ஏற்றிக் கொண்டு லாரிகள் செல்கின்றன? அதனை தடுக்க முடியவில்லையா? நீங்கள் நாச வேலைகளை விரைந்து முடிக்க வேண்டும். இல்லையெனில் பாகிஸ்தானில் இருந்து வளையல்கள் அனுப்பி வைக்கப்படும்’ என்று  கூறப்பட்டிருந்தது. இது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது என்றார்.

‘ஜனநாயகம் திரும்பும் வரை தடுப்பு காவல் தொடரும்’

அஜித் தோவல் மேலும் கூறுகையில், ‘‘காஷ்மீர் மாநிலத்தில் தடுப்புக் காவலில் இருக்கும் அரசியல் தலைவர்கள் மீது தேசத் துரோக வழக்கோ அல்லது குற்ற வழக்கோ பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் ஒன்று கூடுவதை தீவிரவாதிகள்  பயன்படுத்தி கொள்ளக் கூடும் என்பதால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜனநாயகம் மீண்டும் சிறப்பான முறையில் செயல்படும் வரை அவர்கள் காவலில் இருப்பார்கள். மிக விரைவில் ஜனநாயகம் திரும்பும் என நம்புகிறேன்,’’ என்றார்.

Related Stories: