காபூலில் முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் தலிபான்கள் தாக்குதல்..: 10 பேர் பலி, பலர் படுகாயம்

காபூல்: காபூலில் முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷாஷ் தரக் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் அமெரிக்க தூதரகம், ஆப்கானிஸ்தானின் உளவுத்துறை சேவையான தேசிய பாதுகாப்பு இயக்குநரகம்(என்.டி.எஸ்) உள்பட பல முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. எனவே, இப்பகுதியானது உயர் பாதுகாப்புடைய மண்டலமாகும். இந்நிலையில், இன்று காலை உள்ளூர் நேரப்படி 10.10 மணியளவில் ஷாஷ் தரக் பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளில் சுமார் 5000 வீரர்களை திரும்ப பெறுவது தொடர்பாக தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. பயங்கரவாத செயல்களை கைவிடுவதாக தலிபான் அமைப்பு கூறியதையடுத்து இந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இது ஒருபுறமிருக்க ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும் நடந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில், திங்கட்கிழமை கிழக்கு காபூல் குடியிருப்பு பகுதியில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: