மத்திய அரசின் கறுப்புச் சட்டங்களை கண்டித்து திருச்சியில் தமுமுக, அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி: மத்திய பாஜக அரசு, மக்களை பழிவாங்கும் நோக்கோடு இயற்றியுள்ள கறுப்புச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், கும்பல் படுகொலைகளை கண்டித்தும் தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி சென்னை, மதுரை, திருச்சி மற்றும் திருப்பூரில் நேற்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தியது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லாகான் தலைமை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன், அமைப்புச் செயலாளர்கள் தஞ்சை பாதுஷா, வழக்கறிஞர் சரவண பாண்டியன், மாநிலச் செயலாளர் அப்துல்ரஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், விசி பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ரீதர், ஜமாத்துல் உலமா சபை சார்பில் மவ்லவி ரூஹூல் ஹக் ஆகியோர் பங்கேற்று கறுப்புச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் முத்தலாக் சட்டம், யுஏபிஏ ரத்து செய்ய கோரியும், அத்து மீறும் என்ஐஏ கண்டித்தும் காஷ்மீர் மறுநிர்ணயச் சட்டம் கோரியும், பசு மாட்டின் பெயராலும், ஜெய்ஸ்ரீராமின் பெயராலும் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். இதில் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் ஜாபர் அலி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Related Stories: