அணை பரப்பில் குவியும் ஜோடிகள்... காதலர்களின் சொர்க்கபுரியாக மாறிய பொய்கை

ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழியில்-செண்பகராமன்புதூர் சாலையில் வடக்கு மலை அடிவாரத்தில் பொய்கை அணை அமைந்துள்ளது. 42 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு வடக்கு மலையில் உள்ள சுங்கான் ஓடை வழியாக தண்ணீர் வருகிறது. இந்த ஓடை செப்பனிடப்படாததால் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து சுங்கான் ஓடை சீரமைக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு பருவமழை காலத்தில் அதிகபட்சமாக 20 அடி வரை நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாசனம் பெற்றது.

அதன்பின் மழை பெய்யாததால் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. இதனால் தற்போது பொய்கை அணையில் சுமார் 7 அடி அளவே தண்ணீர் உள்ளது. பொய்கை அணையின் நீர்மட்டம் குறைந்துவிட்டதால் இந்த அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகளோ, காவல்துறையினரோ கண்டுகொள்வதில்லை. ஆனால் காட்டில் வாழும் கரடி, சிறுத்தை ேபான்ற கொடிய விலங்குகள் தண்ணீருக்காக அணை பக்கம் வந்து செல்கின்றன. இந்த நிலையில் ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் இந்த பகுதிக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். இவர்கள் அணை பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது, விளையாடுவது என பொழுதை கழிக்கின்றனர். மேலும் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் அவ்வப்போது காதலர்கள் இங்கு வந்து மறைவான இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கின்றனர். அதுபோல் கள்ளக்காதலர்களும் இங்கு அதிகளவில் வருகின்றனர்.

அணையின் நீர்மட்டம் குறைந்தாலும் மடை பகுதி சொகுசு அறை போன்று குளுகுளு சூழலில் காணப்படுகிறது. இதை தெரிந்து வைத்திருக்கும் காதலர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் இங்கு நீண்ட நேரமாக அமர்ந்து இருக்கின்றனர். மேலும் மது விருந்து அளிக்கும் வாலிபர்களும் இங்கு அவ்வப்போது வந்து மது அருந்துகின்றனர். போதை ஏறிய பின் அணையில் இறங்கி குளிப்பது, ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். விவசாயத்துக்காக கட்டப்பட்ட அணை தற்போது சல்லாபத்தின் சொர்க்கபுரியாகவும், மாணவர்களின் கொண்டாட்ட அரங்காகவும் மாறி உள்ளது. இவ்வாறு வரும் காதலர்கள், கள்ளக்காதலர்கள், இளைஞர்களுக்கு ஆபத்தும் உள்ளது. சமீபத்தில் ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்த முதலாம் ஆண்டு மாணவர்கள் அணையில் இறங்கி குளிக்கும் போது அதில் ஒரு மாணவர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் நடந்தது.

மேலும் பொய்கை அணை வடக்கு மலை அடிவாரத்தில் உள்ளதால் இந்த பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வனத்தில் வாழும் கரடி, சிறுத்தை போன்ற கொடிய விலங்குகள் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் அணை பகுதிக்கு வருகின்றன. ஏற்கனவே இப்பகுதியில் உள்ள பல விவசாயிகள் கரடியால் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும் ஆடுகள், கோழிகளை சிறுத்தை அடித்து கொன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. காற்றாலை பண்ணை ஊழியர்கள் சிறுத்தையை நேரில் பார்த்துள்ளனர். அணை பரப்பில் மதுபோதையில் அல்லது உற்சாக கொண்டாட்டத்தில் இருக்கிறவர்களுக்கு இந்த விலங்குகளாலும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. ஆனால் இது எதையும் அறியாத காதலர் ஜோடிகள் மற்றும் கள்ளக்காதல் ஜோடிகள் தனிமையில் இனிமை காணலாம் என நினைத்து இங்கு வருகின்றனர். இங்கிருக்கும் ஆபத்தை உணர்ந்த சமத்துவபுரத்தில் வசிக்கும் மக்கள் காதல் ஜோடிகளையும், மாணவ மாணவிளையும் அழைத்து எச்சரித்து அனுப்பும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது. என்றாலும் இளைஞர்களின் வருகை அதிகமாக உள்ளது.

ஆனால் அணையை பராமரிக்கும் பொதுப்பணித்துறை இது எதையும் கண்டுகொள்ளவில்லை. இங்கு ஏற்கனவே ஒரு காவலாளி பணியில் இருந்தார். ஆனால் சமீப காலமாக காவலாளிகள் யாரும் இருப்பதில்லை. அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக பொய்கை அணைக்கு வந்து ஆபத்தில் சிக்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே பொய்கை அணையில் போதுமான அளவு பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும். இங்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் ெசய்ய வேண்டும். அனுமதியில்லா பகுதிகளுக்கு இளைஞர்கள், காதல் ஜோடிகள் செல்வதை தடுக்க உரிய தடுப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் அடிக்கடி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: