3 அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் ஏர் இந்தியா பெட்ரோல் பாக்கி 4,500 கோடி: சப்ளை நிறுத்தம்

* மூன்று அரசு எண்ணெய் நிறுவனங்கள், புனே, கொச்சி, பாட்னா, ராஞ்சி விசாகபட்டினம், மொஹாலி ஆகிய 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் சப்ளை செய்வதை நிறுத்திவிட்டன.

* விமான எரிபொருள் சப்ளை செய்வதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் இருந்தும், கடந்த 6 மாதங்களாக தராமல் ஏர் இந்தியா நிறுவனம் ரூ.4,500 கோடி பாக்கி வைத்துள்ளது.  
Advertising
Advertising

புதுடெல்லி: மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் விமான எரிபொருள் போட்டதற்கு ஏர் இந்தியா நிறுவனம் ரூ.4,500 கோடி தர வேண்டும். ஆனால், கடந்த 7 மாதங்களாக இந்த தொகையை தராததால் எண்ணெய் நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளன. இதனால், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (எச்பிசிஎல்) ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களும் கடந்த வியாழன் முதல் கொச்சி, புனே, பாட்னா, ராஞ்சி, விசாகபட்டினம், மொஹாலி ஆகிய 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் சப்ளை செய்வதை நிறுத்திவிட்டன.விமான எரிபொருள் சப்ளை செய்ததற்கான கட்டணத்தை செலுத்த 3 மாத கால அவகாசம் தரப்பட்டுள்ளது. அதாவது இன்று பெட்ரோல் போட்டால் இதற்கான தொகையை நவம்பர் 21ம் தேதி செலுத்தினால் போதும்.

ஆனால், இந்த சலுகை காலத்தையையும் தாண்டி கடந்த 200 நாட்களாக பணம் தராமல் பாக்கி வைத்துள்ளது. இப்படி மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.4,500 கோடி பாக்கி வைத்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள், ஏர் இந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளன. உடனடியாக ரூ.4,500 கோடியை செலுத்துமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளன. ஆனால், முதல் கட்டமாக ரூ.60 கோடி செலுத்துவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது  கடலில் கலக்கும் சிறிய துளி போன்றது, இது எப்படி சரியாகும் என்று எண்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்த ஓர் அதிகாரி தெரிவித்தார்.

ஏர் இந்தியா நிறுவனம் இந்த தொகையை செலுத்துவதற்கு எந்த முயற்சியும் செய்யாததால், அதற்கு விமான பெட்ரோல் சப்ளை செய்வதை நிறுத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

நிதி நெருக்கடியில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு நிதி உதவி செய்து உதவுகிறது. ஆனால், அதுபோன்ற எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உதவுவது இல்லை. விமான எரிபொருள் விலை கடந்த 2002ம் ஆண்டில் மாற்றி நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது இருந்து எந்தவித மானிய உதவியும் இல்லாமல் விமானங்களுக்கு எரிபொருள் சப்ளை செய்து வருகிறோம் என்றும் அந்த அதிகாரி கவலை தெரிவித்தார். இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், மத்திய அரசு நிதி உதவி இல்லாமல் இவ்வளவு பெரிய தொகையை (ரூ.4,500 கோடி) ஏர் இந்தியா நிறுவனத்தால் செலுத்த முடியாது. இந்த நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தின் நிதி நிலைமை மேம்பட்டுள்ளது. தற்போது லாபத்தில் இயங்கும் பாதையில் ஏர் இந்தியா முன்னேறியுள்ளது. இந்த நிலையில் இந்த கடன் சுமை புதிய அழுத்தத்தை தந்துள்ளது என்றார். ஏர் இந்தியா நிறுவனம் ரூ.58,000 கோடி அளவுக்கு கடன் சுமையால் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பெரும் பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு கடந்த பல மாதங்களாக முயற்சிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிட்டத்தக்கது.

Related Stories: