சென்னையில் IMEI எண்ணை மாற்றி திருட்டு செல்போன்கள் விற்பனை செய்த கும்பல் கைது

சென்னை:  சென்னையில் IMEI எண்ணை மாற்றி திருட்டு செல்போன்கள் விற்பனை செய்த கும்பலை போலீசார்  கைது செய்தனர். சென்னை அபிராமபுரத்தில் கடந்த 20 நாட்களில் 3 செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இருசக்கர வாகனத்தில் கழுகு பார்வை பார்த்தபடி நோட்டமிட்ட வண்ணம் செல்லும் கொள்ளையர்கள் சாலையில் தனியாக நடந்து செல்பவரிடம் லாவகமாக செல்போனைப் பறித்துச் செல்லும் சம்பவங்கள் குறித்த சிசிடிவி காட்சிகளும் கிடைத்தன. கொள்ளையர்களை பிடிக்க கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. திருடு போன செல்போன்களின்  IMEI எண்களை வைத்து ட்ராக் செய்த போது பல்வேறு இடங்களில் சிக்னல்கள் காட்டின. இதை அடுத்து IMEI எண்ணை ட்ராக் செய்வதை விடுத்து கொள்ளையர்கள் சென்ற வழிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். இதை தொடர்ந்து ரிச்சி தெருவுக்கு அவர்கள் சென்றது உறுதி செய்யப்படவே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

கொள்ளையர்களின் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்ட இடம் அதில் வந்தவர்கள் யாரை சந்தித்தனர் என்று விசாரணை நடத்திய போது முகமது நாசர் என்பவர் சிக்கினார். அப்பாவி பொதுமக்களிடம் இருந்து திருடி கொண்டு வரும் செல்போன்களை வாங்கி விற்கும் தொழிலை முகமது நாசர் செய்து வந்தது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். முகமது நாசரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது சீன மென்பொருள் உபகரணங்களின் உதவியோடு திருட்டு செல்போன்களில் IMEI எண்கள் மாற்றப்படுவதும் அவை கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு விற்கப்படுவதும் அம்பலமானது. மேலும் சென்னையில் உள்ள 4 முக்கிய இடங்களில் திருட்டு செல்போன்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

முகமது நாசர் அளித்த தகவலின் பேரில் திருவான்மியூரில் இருந்து மந்தைவெளிக்கு ரயிலில் வந்த 3 கொள்ளையர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதை அடுத்து அடையாரை சேர்ந்த ராமு, ஆரியபுரத்தை சேர்ந்த யுகேஸ்வர், மந்தைவெளியை சேர்ந்த சிவகுமார் என்ற அந்த 3 கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முகமது நாசர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பொக்கை ரவி என்ற ரவுடியுடன் சேர்ந்து பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட காரணத்தாலும், ராயப்பேட்டை மருத்துவமனையில் ரவுடி ஒருவரை உள்ளே புகுந்து வெட்டிய வழக்கிலும் நாசருக்கு தொடர்பு இருந்த காரணத்தால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Related Stories: