நெல்லையில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை பால் விலையை உயர்த்தி மக்கள் வயிற்றில் அடித்துள்ளனர்: நெல்லையில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

நெல்லை: தமிழகத்தில்  பால் விலையை உயர்த்தி மக்கள் வயிற்றில் அடித்துள்ளதாக  நெல்லையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். சுதந்திரப் போராட்ட  வீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளை முன்னிட்டு நெல்லை நீதிமன்றம் எதிரே உள்ள  ஒண்டிவீரன் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒண்டிவீரன் 2 ஆயிரம் வீரர்களை கொண்ட ஆங்கிலேய தளபதியை எதிர்த்துப்  போராடி வெற்றி கண்டவர். அவருக்கு தலைவர் கலைஞர் ஆட்சியில் மணிமண்டபம்  அமைக்கவும், அதில் உருவசிலை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த  உணர்வோடு இன்று மாலை அணிவித்துள்ளேன்.அருந்திய சமுதாய மக்களுக்கு  கல்வி, வேலைவாய்ப்பில் 3.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு அளித்து  சட்டமன்றத்தில் அந்த தீர்மானத்தை நிறைவேற்றி சட்ட வடிவமாக்கியவர் கலைஞர்.

Advertising
Advertising

அந்த சட்டம் நிறைவேற்றும் நாளில் அவர் உடல் நலிவுற்று  மருத்துவமனையில் ஓய்வில் இருந்த நிலையில் துணை முதல்வராக இருந்த நான், அந்த சட்டத்தை சட்டமன்றத்தில்  ஏகமனதாக நிறைவேற்றியது, எனக்குக் கிடைத்த பெருமை.

தமிழகத்தில்  2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு பால் விலையை 3வது முறையாக  உயர்த்தியுள்ளது. பால் மக்களுக்கு வார்ப்பார்கள், ஆனால் பால் விலையை உயரத்தி மக்கள் வயிற்றில் அடித்துள்ளனர். பால் கொள்முதல் விலையை உயர்த்தும் போது வேறு வழியில்லை என முதல்வர் எடப்பாடி கூறுகிறார். இதன் மூலம் பால்  கொள்முதல் செய்பவர்களுக்கும், மக்களுக்கும் இடையே பிரிவை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.  பால் வளத்துறையை பொறுத்தவரை அதிக லாபத்தில் இயங்கி வருகிறது என அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி கூறி வருகிறார். ஆனால் முதல்வர் எடப்பாடி நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறுகிறார்.  இப்படி அமைச்சரும், முதல்வரும்  முரண்பட்ட கருத்தை தெரிவித்துள்ளனர். இதில் எது உண்மை, எது பொய் என்பதை மக்களிடத்தில் முதலில்  எடுத்துச் சொல்ல வேண்டும்.

நாங்குநேரி இடைத்தேர்தலை பொறுத்தவரை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் முதலில் அறிவிக்கட்டும். தமிழகத்தில் ஊழல், லஞ்சம், கொள்ளை ஆகியவற்றை மூடி  மறைக்கவே தமிழக அரசு மாவட்டங்களை பிரித்து வருகிறது. நல்ல எண்ணத்தில் பிரிக்கவில்லை. திமுக எம்பிக்களும், கூட்டணி கட்சிகளின் எம்பிக்களும் காஷ்மீர் பிரச்னை மட்டுமல்ல, இந்தியாவில்  எந்த மாநிலத்தில் பிரச்னை என்றாலும், அதற்காக குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: