அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி

* ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுரை

* நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்தி வைப்பு
Advertising
Advertising

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் வைகோ திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை டாக்டர்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தி இருப்பதால், 3 நாட்கள் நடக்கவிருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்தி வைக்கப்படுவதாக மதிமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் கட்சி நிர்வாகிகள் உடன் நேற்று ஆலோசனை நடத்துவதாக இருந்தது.  இதற்காக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் அவர் அங்கு நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்த நிலையில் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் தேசிய அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். அதே நேரத்தில் தொடர்ந்து ஓய்வின்றி நிகழ்ச்சிகளில் வைகோ கலந்து கொள்வதால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதுரை வந்த அவருக்கு திடீரென குறைந்த ரத்தம் அழுத்த பிரச்னையால் அவரது உடல்நிலையில் சோர்வு காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வைகோ ஓய்வு எடுக்குமாறு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனால், வரும் 20,21,23ம் தேதிகளில் நடைபெறவிருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இது குறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவ பரிசோதனைக்காக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் இருப்பதால் 20,21,22 ஆகிய நாட்களில் தலைவர் வைகோ தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: