57வது பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் திருமாவளவன்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் தன்னுடைய 57வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். விசிக தலைவர் திருமாவளவன் தன்னுடைய 57வது பிறந்தநாளை முன்னிட்டு  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ஒவ்வொரு வருடமும் என்னுடைய பிறந்த நாளன்று தலைவர்  கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெறுவது வழக்கம். தற்போது அவர் நம்முடன் இல்லாததால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். இதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கலைஞர் இடத்தை மு.க.ஸ்டாலின்  நிரப்பியுள்ளார். ஆகஸ்ட் மாதம் முழுவதும் பனை விதைகளை விதைப்பது என்கிற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். ஜாதிகளை அடையாளப்படுத்தும் விதமாக பள்ளி மாணவர்கள் கயிறுகளை கட்ட கூடாது என்ற அறிவிப்பை விசிக  வரவேற்கிறது. மாணவர்கள் சாதி என்ற சாயம் இல்லாமல் சுதந்திரமாக படிக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: சமத்துவம்  மற்றும் சமூக நீதியின் உறுதிமிக்க குரலாக நாடாளுமன்றத்தில் ஓங்கி  ஒலித்துக்கொண்டிருக்கும் விடுதலைச்  சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு 57வது  பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மனமகிழ்ச்சி கொள்கிறேன். இளம் வயதிலிருந்தே இடது சாரிச் சிந்தனையுடன் குரல்  கொடுத்து வரும் திருமாவளவன் தலைவர்  கலைஞர் மீதும், என் மீதும், திமுக மீதும், லட்சியங்களின் அடிப்படையிலும் தனிப்பட்ட  முறையிலும், அளப்பரிய பற்றும் பாசமும் வைத்திருப்பவர். திருமாவளவன் பல்லாண்டு காலம், உடல் நலத்துடனும் மன வளத்துடனும் நிறைவுடனும்,  வாழ  வேண்டும் என்று எனது இதய பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்  கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: