அதானி நிறுவன வழக்குகள் விசாரணைக்கு வந்ததில் விதிமீறல்... உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அதானி நிறுவனம் தொடர்பான வழக்குகள் விதிகளை மீறி உச்சநீதிமன்றத்தின் குறிப்பிட்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததாக மூத்த வழக்கறிஞர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே எழுதியுள்ள கடிதத்தின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதில் அதானி நிறுவனம் தொடர்பான 2 வழக்குகள் மே மாதத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா மற்றும் நீதிபதி எம்.ஆர்.ஷா முன்பு விசாரணைக்கு வந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக துஷ்யந்த் தவே கூறியுள்ளார். அதானி நிறுவனம் வழக்கு அவசர கதியில் கோடைக்கால விசாரணை பட்டியலில் சேர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பை பொருத்து அதானி நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் இருப்பதால் குறிப்பிட்ட அமர்வு விசாரித்தது பற்றி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விசாரணை நடத்த வேண்டும் என அக்கடிதத்தில் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வலியுறுத்தியுள்ளார். எனினும் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள அதானி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் உச்சநீதிமன்றத்தின் விதிகளுக்கு உட்பட்டே வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: