தமிழகத்தில் நடந்து வரும் அடிமை ஆட்சியை அகற்ற வேண்டும்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் அடிமை ஆட்சியை அகற்ற வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறினார். கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் ஆரூண் ஏற்பாட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனத்தை சத்தியமூர்த்தி பவனில் நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: சுதந்திர போராட்டத்தின் போது ஒரு நாள் கூட சிறைக்கு செல்லாமல் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள் இப்போது ஏன் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார்கள்.

இதுதான் காலத்தின் துயரம். ஆர்எஸ்எஸ்சின் கொள்கைகளை திணிக்க பாஜ முயற்சி செய்கிறது. இது தவறாக முடியும்.  தமிழகத்தில் நடைபெற்று வரும் அடிமை ஆட்சியை அகற்ற வேண்டும். அதிமுக பாஜவின் ஊதுகுழலாக செயல்படுகிறது. மத்திய அரசு தமிழகத்தில் கொண்டு வரும் மக்கள் விரோத திட்டங்களை எல்லாம் அதிமுக அரசு ஆதரித்து செயல்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறது. ரஜினியிடம் அன்பாக ஒன்றை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். காஷ்மீர் மக்களின் உரிமையை பறிப்பதில் என்ன ராஜதந்திரம் இருக்கப் போகிறது.

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் நீக்கப்பட்டு விட்டதால், புதிய மாவட்ட தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார். திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் மக்களின் கருத்துகளையும், உணர்வுகளையும் புரிந்து இந்த அரசு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: