முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் திருப்பூர் ஆசாமி சிக்கினார்

திருப்பூர்: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போன் செய்த திருப்பூர் ஆசாமியை கணியூர் போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக  மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. இதனால் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.  இதற்கிடையில் நேற்று அதிகாலை சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு, மேட்டூர் அணையை திறந்துவைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும்போது அந்த  பகுதியில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார்.

யார் பேசுவது என்று கேட்டதற்கு முடிந்தால் கண்டுபிடியுங்கள் என கூறிவிட்டு அவர் இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.  போனில் மிரட்டல் விடுத்து பேசியது யார்? என கண்டறிய விசாரணை நடத்தப்பட்டது. அப்போது செல்ேபானில் பேசி மிரட்டல் விடுத்தது திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் துங்காவியை சேர்ந்த தேவகிருஷ்ணன் (எ) குமார் (40) என்பது  தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, சென்னை கட்டுப்பாட்டு அறையிலிருந்து உடுமலை அருகே கணியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் கணியூர் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி தேவகிருஷ்ணன் (எ)  குமாரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேட்டூர் அணை பகுதியில் குண்டு வெடிக்கும் என்று கூறியதால் அதிகாலை முதல் வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டருடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே  அனுமதிக்கப்பட்டனர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.

Related Stories: