ப.சிதம்பரம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு கே.எஸ்.அழகிரி பதில்

சென்னை: அரசியல் விபத்தின் மூலம் பதவிக்கு வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று கூறியுள்ள கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் மாநில உரிமை பறிப்பைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆற்றிய உரைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய பதிலைக் கூறாமல் பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்தியாவின் நிதியமைச்சராக இருந்து 9 நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்து வரலாறு படைத்தவரை  பார்த்து, ‘இவர் பூமிக்கு பாரமாக இருக்கிறார், நாட்டிற்கு இவரால் என்ன பயன். இவர் கொண்டு வந்த புதிய திட்டம் என்ன என்று காழ்ப்புணர்ச்சியுடன் கடுமையாக பேசியிருக்கிறார்.
Advertising
Advertising

ப.சிதம்பரம், மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்து சென்வாட் வரியை ரத்து செய்து கைத்தறி நெசவாளர்களின் துயரத்தை நீக்கினார். சென்னை மாநகர மக்களின் குடிநீர் பஞ்சத்தைப் போக்க நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ₹1000 கோடி நிதி ஒதுக்கி செயல்படுத்தினார். 2008ம் ஆண்டு 4 கோடி விவசாயிகளின் கடன் சுமையை போக்குவதற்காக ₹65 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக்கடன் திட்டத்தை அறிவித்தவர். இதன் பயனாக  24 லட்சம் மாணவர்களுக்கு ₹56 ஆயிரம் கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டது.

காமராஜரின் கனவு திட்டமான மதிய உணவு திட்டத்தை அகில இந்திய அளவில் பள்ளிகளில் அறிமுகப்படுத்தியவர். இப்படி அவரது சாதனை திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ப.சிதம்பரம் பதவியிலிருந்த போது நிறைவேற்றிய திட்டங்கள் என்ன என்று முதல்வர் எடப்பாடி கேட்கிறார். நிறைவேற்றிய திட்டங்களின் பட்டியல் போதுமா, இன்னும் வேண்டுமா?. இத்தகைய சாதனைகளை நிகழ்த்தியவரை, தமிழகமே பாராட்ட வேண்டிய அவரை, விபத்தின் மூலம் முதல்வராக பதவிக்கு வந்த எடப்பாடி, உங்களுக்கு பாராட்ட மனம் இல்லை என்றாலும், சிறுமைப்படுத்தாமல் இருக்கலாமே. அவரது திறமையான அணுகுமுறையின் காரணமாகவே, அவரை நோக்கி பதவிகளும், பொறுப்புகளும் வந்தன. என்றைக்கும் இவர் பதவிகளை தேடிப் போனதே இல்லை. பதவிகள்தான் இவரை தேடி வந்திருக்கின்றன. ஆனால், எடப்பாடி பழனிசாமி எப்படி பதவிக்கு வந்தார் என்பதும், பதவிக்கு வந்த போது அவர் யார் காலில் விழுந்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்பதும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: