பல்லாவரம் ஜமீன் ராயப்பேட்டை பகுதியில் சாலை, கால்வாய் வசதியின்றி மக்கள் அவதி: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

தாம்பரம்:  பல்லாவரம் ஜமீன் ராயப்பேட்டை பகுதியில் சாலை மற்றும் கால்வாய் வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.  பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜமீன் ராயப்பேட்டை, போஸ்டல் நகர், குளக்கரை தெரு போன்ற பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்கள், ஜமீன் ராயப்பேட்டை பகுதியில் இருந்து குளக்கரை தெரு மற்றும் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக பல்லாவரம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.  மேலும், அந்த தெருவில்தான் அப்பகுதி மக்களுக்கான ரேஷன் கடை உள்ளது. இதனால், போக்குவரத்து மிகுந்து காணப்படும். ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த இந்த தெருவை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் சிதிலமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் தெரு முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்த பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த தெருவில் உள்ள பள்ளங்களில் தேங்குவதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்துடன் செல்கின்றனர். அதுமட்டுமின்றி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் இப்பகுதியில் சாலை, கால்வாய் என எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் செய்வதில்லை. மழைநீர் கால்வாய் இல்லாததால் தெருவில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு தொல்லையும் அதிகமாகி தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகிறோம்.

தற்போது தெரு முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளதால் இவ்வழியாக பள்ளி, கல்லூரிகள், வேலைக்கு என சென்று வருபவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பகுதிக்கு சாலை மற்றும் கால்வாய் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: