8 வழிச்சாலைக்காக யாருக்கும் நெருக்கடி தந்து நிலத்தை எடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை: முதல்வர் பேட்டி

சேலம்: 8 வழிச்சாலை எனப்படும் அதி விரைவு சாலைக்காக யாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் கருப்பூரில் வங்கி கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துக் கொண்டு, பயனாளிகளுக்கு 112 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது பேசிய முதல்வர், பொதுவாக வங்கியில் கடன் வாங்கும் எவரும், அதனை திருப்பி செலுத்துவதில்லை என்றார்.

ஆனால், இந்த பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுவினர் 99 சதவீதம் கடன்களை திருப்பி செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இதன்மூலம், தமிழ்நாடு கிராம வங்கியின் வாராக் கடன்கள் குறைந்திருப்பதாகவும், இது சாமானிய மக்களின் நேர்மைக்கான சான்று எனவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் பால் உற்பத்தியில் சேலம் மாவட்டம் முதலிடம் வகிப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, பால் உற்பத்தியாளர்களுக்கு 3 லட்ச ரூபாய் வரை தனிநபர் கடன் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.

முதல்வரின் சில அறிவிப்புகள்:

மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு நூறு ஏரிகளை நிரப்பும் திட்டம் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். சேலம் மாவட்டம் தலைவாசலில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைக்கப்படும் எனவும், இங்கு கால்நடை மருத்துவக் கல்லூரி செயல்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் புதிய சட்ட கல்லூரி தொடங்கப்படும் என்றும், நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவித்தார்.

முதல்வர் பேட்டி:

நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது, 8 வழிசாலைக்காக யாருக்கும் நெருக்கடி தந்து நிலத்தை எடுக்க வேண்டும் என்ற அவசியம் அரசுக்கு இல்லை என தெரிவித்தார். விரைவுச்சாலை அமைப்பதற்கு 70 விவசாயிகள் நிலத்தை அளிப்பதாக மனு அளித்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். தமிழக அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு அல்ல என்றும், நவீன முறைப்படி அதி விரைவு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறினார். புதிய தொழிற்சாலைகள் அமைய வேண்டுமெனில் உள்கட்டமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் நிறைவேறும்பொழுது, அதில் இருக்கின்ற மிகைநீரை எடுத்து வறட்சியான ஏறி குளங்களில் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார். உபரி நீரில் ஒரு சொட்டுகூட வீணாகாமல் எந்தெந்த வழியில் விவசாயிகள் பயன்படுத்த முடியுமோ, அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசாங்கம்  நிறைவேற்றும் என தெரிவித்தார். ஒரு சொட்டு நிராக இருந்தாலும் அதை முறையாக பயன்படுத்தவேண்டும் என்பதுதான் அரசின் திட்டம் என்றும் கூறியுள்ளார்.

Related Stories: