முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மாதம் (ஜூன்) 28ம் தேதி தொடங்கி நேற்று வரை 17 நாட்கள் நடந்தது. அப்போது, 2019-20ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நேற்று மாலை சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்றனர். அங்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அனைவரும் ஜெயலலிதா சமாதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அருகில் உள்ள எம்ஜிஆர் சமாதிக்கும் முதல்வர் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அதிமுக எம்எல்ஏக்களும் உடன் இருந்தனர்.

Related Stories: