வாழப்பாடியில் பரபரப்பு குடிநீரில் புழுக்கள் நெளிந்ததால் பெண்கள் முற்றுகை

வாழப்பாடி : வாழப்பாடி பேரூராட்சியில் குடிநீரில் புழுக்கள் நெளிந்ததால், செயல் அலுவலரை முற்றுகையிட்டு பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.வாழப்பாடி பேரூராட்சியில் 6வது வார்டு சந்தைப்பேட்டை பகுதியில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இப்பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீரில் புழுக்களுடன், மண் கலந்து வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி பெண்கள் வாழப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல் சாதிக் பாட்ஷாவை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பெண்கள் கூறியதாவது: சந்தைப்பேட்டையில் 20 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அந்த குடிநீரும் தூய்மையாக இல்லை. மண் மற்றும் புழுக்கள் கலந்து தண்ணீர் வருகிறது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும், அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதியில் திமுகவினர் அவர்களது சொந்த செலவில் குடிநீர் விநியோகித்தனர். இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் விட்டு அதன்மூலம் குடிநீர் விநியோகம் செய்தனர். அந்த தொட்டி கடந்த 2015ம் ஆண்டு கடைசியாக சுத்தம் செய்யப்பட்டது.

அதன்மூலம் தண்ணீர் விநியோகிப்பதால், புழுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய்கள் பரவுகிறது. இதனால், எங்கள் பகுதியில் சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செயல் அலுவலரிடம் தெரிவிக்க பேரூராட்சி அலுவலகம் சென்றபோது, அவர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க மறுத்து மிரட்டுகிறார். இதுதொடர்பாக கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: