புரோ கபடி சீசன் 7 ஐதராபாத்தில் இன்று கோலாகல தொடக்கம்: டைடன்ஸ் - மும்பா பலப்பரீட்சை

ஐதராபாத்: புரோ கபடி தொடரின் 7வது சீசன், ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் தெலுங்கு டைடன்ஸ் - யு மும்பா அணிகள் மோதுகின்றன. கபடி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள புரோ கபடி போட்டித் தொடரின் 7வது சீசனில், தமிழ் தலைவாஸ் உட்பட மொத்தம் 12 அணிகள் களம் காண்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 11 அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 22 லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளன. அக். 11ம் தேதி வரை மொத்தம் 132 லீக் போட்டிகள் நடைபெறும். லீக் சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். மேலும் 3, 4, 5, 6வது இடங்களை பிடிக்கும் 4 அணிகள், 2 வெளியேற்றும் சுற்றுகளில் (எலிமினேட்டர்) விளையாட உள்ளன. அந்த 2 போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறலாம்.

Advertising
Advertising

எலிமினேட்டர் போட்டிகள் அக்.14ம் தேதியும், அரையிறுதிப் போட்டிகள் அக்.16ம் தேதியும், இறுதிப் போட்டி அக்.19ம் தேதியும் நடக்க உள்ளன. இந்தப் போட்டிகள் நடைபெறும் இடம் பின்னர் முடிவு செய்யப்படும். லீக் சுற்றுப் போட்டிகள் ஐதராபாத், மும்பை, பாட்னா, அகமதாபாத், சென்னை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, புனே, ஜெய்பூர், பாஞ்ச்குலா, கிரேட்டர் நொய்டா ஆகிய 12 நகரங்களில் நடைபெற உள்ளன. இன்று இரவு ஐதராபாத்தில் தொடங்கும் புரோ கபடி 7வது சீசனின் தொடக்க போட்டியில் தெலுங்கு டைடன்ஸ் - யு மும்பா அணிகள் விளையாடுகின்றன. தொடர்ந்து 2வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூர் புல்ஸ், 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தமிழ் தலைவாஸ் நாளை தனது முதல் போட்டியில் தெலுங்கு டைடன்ஸ் அணியை எதிர் கொள்கிறது.

களம் காணும் அணிகள்

1. தமிழ் தலைவாஸ்

2. அரியானா ஸ்டீலர்ஸ்

3. தபாங் டெல்லி

4. ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ்

5. பெங்கால் வாரியர்ஸ்

6. பெங்களூர் புல்ஸ்

7. தெலுங்கு டைடன்ஸ்

8. குஜராத் பார்ச்சூர் ஜெயன்ட்ஸ்

9. உபி யோதா

10. பாட்னா பைரேட்ஸ்

11. யு மும்பா

12. புனேரி பல்தான்

லேட்டஸ்ட் அணிகள்:

புரோ கபடி முதல் 4 சீசன்களில் 8 அணிகள் மட்டுமே களம் கண்டன. தொடர்ந்து 2017ம் ஆண்டு தமிழ் தலைவாஸ், குஜராத் பார்ச்சூன், அரியானா ஸ்டீலர்ஸ், உபி யோதா ஆகிய அணிகள் அறிமுகமாகின.

இந்த அணிகளில் குஜராத் 2வது இடத்தையும், உபி யோதா 3 வது இடத்தையும் தொடர்ந்து 2 முறை பெற்றன. தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் தொடர்ந்து 2முறையும் தங்கள் பிரிவில் கடைசி இடத்தை பெற்றன.

தமிழக வீரர்கள்:

புரோ கபடியில் தமிழக வீரர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ் தலைவாஸ் அணி வந்த பிறகும் இந்த எண்ணிக்கை உயரவில்லை.

தமிழ் தலைவாஸ் :

இந்த அணியில் கடந்த சீசனில் இடம் பெற்ற சி.அருண், டி.கோபு, டி.பிரதாப், கே.ஜெயசீலன், விமல் ராஜ் ஆகியோருக்கு இந்த முறை அணியில் இடம் கிடைக்கவில்லை. இவர்களில் சி.அருண் மட்டும் தெலுங்கு டைடனுக்காக விளையாட உள்ளார். மற்றவர்களுக்கு இந்த சீசனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழக வீரர்களில் பொன் பார்த்தீபன் மட்டும் தக்க வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கும் ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. மேலும் அறிமுக வீரர்களாக வி.அஜித்குமார், எம்.அபிஷேக் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

டெல்லி தபாங்:

டெல்லி அணியின் முக்கிய வீரராக சந்தின் ரஞ்சித் திகழ்கிறார். கடந்த சீசனில் டெல்லி அணியில் அதிக புள்ளிகள் எடுத்த வீரராக இருந்தும் இந்த சீசனில் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், ரஞ்சித்தை ஏலத்தில் எடுக்க மற்ற அணிகள் போட்டிப்போட, டெல்லியும் போட்டிப்போட்டு 70 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. அந்த அணியின் போனஸ் புள்ளி நாயகன் ரஞ்சித்.

பெங்கால் வாரியர்ஸ்:

தமிழக வீரர்கள் அதிகம் உள்ள அணியாக மட்டுமல்ல, ஆடும் அணியிலும் தமிழக வீரர்களை களம் இறக்க உள்ள அணியாகவும் பெங்கால் வாரியர்ஸ் அணி உள்ளது. இந்த அணியில் விஜின் தங்கதுரை தக்கவைக்கப்பட்டுள்ளார். இக்கட்டான நேரத்தில் பாடிச் சென்று புள்ளிகளை சேர்ப்பதில் வல்லவரான கே.பிரபஞ்சன், இந்திய அணியில் ஆடி அனுபவம் பெற்ற ‘உடும்புப் பிடி’ ஜீவாகுமாரும் இந்த அணியில் உள்ள தமிழக வீரர்கள்.

அரியானா ஸ்டீலர்ஸ்:

ஆசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற தர்மராஜ் சேரலாதன் இப்போது அரியானா அணியின் கேப்டனாக உள்ளார். இவர் பாட்னா அணி கேப்டனாக இருந்தபோது அந்த அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஜெய்பூர் அணியில் இருந்த கே.செல்வமணியை ₹16.5 லட்சத்துக்கு இந்த அணி வாங்கியுள்ளது. எச்என்.அருண்குமார் இந்த அணியில் தொடர்கிறார்.

ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ்:

இந்த அணியின் ஆல் ரவுண்டர் சாந்தப்பன் செல்வம் தக்கவைக்கப்பட்டுளளார். அணி தள்ளாட்டத்தில் இருக்கும் போது களமிறங்கி காப்பாற்றி கரை சேர்ப்பதில் வல்லவர். ஏ.இளவரசன் அறிமுக வீரராக புரோ கபடியில் விளையாட உள்ளார்.

யு மும்பா அணி:

இந்த அணியில் ராஜகுரு சுப்ரமணியன் ₹33.83 லட்சத்துக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார். கடந்த முறை அதிக வாய்ப்பில்லாத நிலையில் இந்த முறை முக்கிய வீரராகக் களம் காண உள்ளார். வினோத் குமார் அறிமுக வீரராக அணியில் இணைந்துள்ளார். இவர்களை தவிர ஆர்.ராம் புனேரி பல்தான் அணிக்காகவும், தமிழ் தலைவாஸ் முக்கிய வீரர் சி.அருண் இப்போது தெலுங்கு டைடன்ஸ் அணிக்காகவும் விளையாட உள்ளனர்.

Related Stories: