பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்: சட்டப் பேரவையில் திமுக கோரிக்கை

சென்னை: பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று திமுக எம்எல்ஏ தாயகம் கவி பேசினார்.  சட்டப் பேரவையில் நேற்று செய்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திரு.வி.க.நகர் தாயகம் கவி(திமுக) பேசியதாவது: செய்தி மக்கள் தொடர்பு துறை என்று பெயர் சூட்டியவர் கலைஞர். குமரி கடலில் 133 அடி உயரத்தில் 7000 டன் எடை கொண்ட திருவள்ளூர் சிலையை கலைஞர் திறந்து வைத்தார். அந்த சின்னம் இன்று பராமரிப்பில்லாமல் சிலையை சுற்றி இருள் சூழ்ந்துள்ளது. படகு போக்குவரத்தும் விவேகானந்தர் சிலைக்கு மட்டுமே செல்கிறது. பத்திரிகையாளராக இருந்த கலைஞர் அவர்கள் நிலையை உணர்ந்து பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார். ஆனால் 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் ஓய்வூதியம் பெற்றிருப்பவர்கள் வெறும் 182 பேர் மட்டுமே. அதேபோன்று குடும்ப ஓய்வூதியம் பெறுவர்கள் வெறும் 38 பேர் தான். அமைச்சர் கடம்பூர் ராஜூ: அதிமுக ஆட்சியில் தான் பாரதியாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது. வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் அரசு விழா எடுக்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் அறிமுகப்படுதியது வேண்டுமானால் நீங்களாக இருக்கலாம். அப்போது ரூ.5000 மட்டுமே வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் படிப்படியாக உயர்த்தப்பட்டு இப்போது ரூ.10ஆயிரமாக வழங்கப்படுகிறது. டெல்லியில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்களுக்கு இதுவரை அடையாள அட்டை வழங்கப்படாமல் இருந்தது. நாடாளுமன்ற வளாகத்தில் புல் வெளியில் அமர்ந்து செய்தி சேகரிப்பதாக சொன்னார்கள்.

உடனடியாக ஒரு வாரத்துக்குள் அடையாள அட்டை வழங்கினோம்.  தாயகம் கவி: இன்னும் சொல்லப் போனால் இந்த ஒய்வூதிய பலன்களை தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் ஒருவர் கூட பெறவில்லை. அதற்கு காரணம், ஓய்வூதியம் பெறுவதற்கான விதிமுறைகளில் சிக்கல் உள்ளது. அதை தளர்த்தினால் நன்றாக இருக்கும். 1997ம் ஆண்டு முதல் இன்று வரை 57 பேர் மட்டுமே குடும்ப நல நிதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருப்பது போல பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். சினிமா துறையினருக்கு விருது வழங்கும் நடைமுறை கலைஞர் ஆட்சியில் இருந்தது. ஆனால் இப்போது பல ஆண்டு காலமாக வழங்கப்படவில்லை.

 அமைச்சர் கடம்பூர் ராஜூ: தமிழக திரைப்படத்துறை வரலாற்றிலே ஒரே அரசாணையின் மூலம் 433 விருதுகளை முதல்வர் தற்போது அறிவித்துள்ளார். திமுக ஆட்சியில் 2009ல் இருந்து 2011 வரை வழங்கப்படாத விருதுகளையும் சேர்த்து வழங்கப்படும். குறைந்த பட்ஜெட் திரைப்படங்களுக்கு ரூ.5லட்சமாக இருந்த மானியத் தொகையை ரூ.7லட்சமாக உயர்த்தியுள்ளோம். அதன்படி 149 திரைப்படங்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு பணிக் கொடை மற்றும் ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ரூ.2லட்சத்தில் இருந்து ரூ.3லட்சமாக உயர்த்தப்பட்டது. குடும்ப ஓய்வூதியம் ரூ.5ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தாயகம் கவி: திரைப்பட துறையினருக்கு நலவாரியம் தொடங்கி பல உதவிகளை கலைஞர் வழங்கினார். ஆனால் இந்த அரசோ அதற்கு போதிய நிதி ஒதுக்காமல் தள்ளாடிய நிலையில் உள்ளது. அமைச்சர் கடம்பூர் ராஜூ: திரைப்படத் துறை நலவாரியம் மூன்று முறை கூட்டப்பட்டு ஆலோசிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு விரைவில் தேவையான நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளோம். எனவே திரைப்படத் துறை தள்ளாடவில்லை. நிலையாக இருக்கிறது. நலவாரிய உறுப்பினர்கள் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்.

 தாயகம் கவி: அரசு மைய அச்சகத்தில் உள்ள புதிய கட்டிடம் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வராததால் இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டிடத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தண்டையார்பேட்டையில் உள்ள குடியிருப்புகள் அனைத்தும் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.  அமைச்சர் கடம்பூர் ராஜூ: தண்டையார்பேட்டையில் உள்ள குடியிருப்புகளில் 300 வீடுகள் பயன்பாட்டில் உள்ளது. அதில் பழமையான குடியிருப்புகளை இடித்து புதிய குடியிருப்புகளை கட்டவும், சிதிலமடைந்துள்ள குடியிருப்புகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்கசிவால் தீக்கிரையான அரசு மைய அச்சகத்துக்கு ரூ.21.77 கோடி செலவில் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு முதல்வர் திறந்து வைத்துள்ளார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.பத்திரிகையாளராக இருந்த கலைஞர் அவர்கள் நிலையை உணர்ந்து பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார்.

Related Stories: