மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் புதிதாக 108 அறிவிப்புகள்: அமைச்சர் வெளியிட்டார்

சென்னை: மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து 108 அறிவிப்புகளை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.சட்டப்பேரவையில் நேற்று மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் குடும்ப நலத்துறை மானிய கோரிக்கை விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்புகள்:

* சென்னையில் உள்ள மன நல காப்பகத்தில் மன நல சிகிச்சை தரத்தை உயர்த்துவதற்காக ஒரு ஒப்புயர்வு மையம் ரூ.25.41 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
Advertising
Advertising

* தமிழ்நாடு அவசர கால ஊர் சேவை திட்டத்திற்கு ரூ.26.39 கோடி செலவில் 121 அவசர கால ஊர்திகள் வழங்கப்படும்.

* ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை ஒரு மருத்துவமனையில் இருந்து வேறு உயர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்வதற்காக 120 சிறப்பு வாகனங்கள் ரூ.19.2 கோடியில் வழங்கப்படும்.

*  மதுரையில் ரூ.20 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் நிறுவப்படும்.

* சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ஒரு நடமாடும் சி.டி. ஸ்கேன் கருவி ₹7 கோடி செலவில் வழங்கப்படும்.

* கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.6 கோடியில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி நிறுவப்படும்.

* சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் 128 சி.டி ஸ்கேன் கருவி வழங்கப்படும்.    

* 23 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை ஆகிய 25 மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை மையங்களில் துரித ஆய்வு கூடம் அமைப்பதற்கு, தேவையான கருவிகள் மற்றும் இதர வசதிகள் ரூ.2.77 கோடியில் ஏற்படுத்தப்படும்.    

* திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு ரூ.1 கோடி செலவில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி வழங்கப்படும்.    

* அரசு பள்ளிகளில் செயல்படும் பெற்றோர்-ஆசிரியர் கழகம் போலவே அரசு மருத்துவமனைகளிலும், ‘மருத்துவமனை மேம்பாட்டு குழு’ அமைக்கப்படும்.

* அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக 200 டயாலிசிஸ் கருவிகள் ரூ.17 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.      

* செங்கல்பட்டு, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.14 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக சி.டி ஸ்கேன் கருவிகள் வழங்கப்படும்.      

* வளரிளம் பெண்களிடையே ரத்த சோகையை தடுப்பதற்காக, நெல்லிக்காய் பொடி, கறிவேப்பிலைப் பொடி, முருங்கைக் கீரைப் பொடி மற்றும் தேன் அடங்கிய அம்மா இயற்கை நலப் பெட்டகம் ரூ.1.75 கோடி செலவில் வழங்கப்படும்.      

* விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கூடுதலாக புதிய மூன்று உணவு பகுப்பாய்வு கூடங்கள் ரூ.9 கோடி மதிப்பிட்டில் அமைக்கப்படும்.    

* ரத்த சோகை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் பொருட்டு 65 லட்சம் மகளிருக்கு ரூ.8.7 கோடி செலவில் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலச்சத்து மாத்திரைகளும், குடற்புழு நீக்க மாத்திரைகளும் வழங்கப்படும்.    

* சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.7.2 கோடி மதிப்பீட்டில் மாணவர்களுக்கு கூடுதல் விடுதி கட்டிடம் கட்டப்படும்.    

* பவானி, ராசிபுரம், குமாரபாளையம், பாபநாசம், கோலார்பட்டி, தொண்டாமுத்தூர். போடிநாயக்கனூர் ஆரணி அரசு மருத்துவமனைகளுக்கும், மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கும் ரூ.13.5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்படும்.    

* இரவும் பகலும் பணிபுரிவதால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் நோக்கத்தோடு, மக்கள் நல்வாழ்வுத் துறையில் பணிபுரியும் பல்வேறு பணியாளர்களுக்கு மன அழுத்த குறைப்பு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும்.

* மக்கள் நல்வாழ்வுத் துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அவரவர் விருப்ப பங்களிப்பில் ஒரு தொகுப்பு நிதி உருவாக்கப்பட்டு, பணியாளர்கள் பணிக்காலத்தில் எதிர்பாராத வகையில் உயிரிழந்தால், இத்தொகுப்பு நிதியிலிருந்து அவர்கள் குடும்பத்திற்கு அவரவர் பங்களிப்பின் அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 108 அறிவிப்புகளை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.   

Related Stories: