கொத்து, கொத்தாக வைத்துக்கொண்டு கூவி, கூவி விற்கப்படும் மயில் தோகை

சேலம்: சேலத்தில் நாட்டின் தேசிய பறவையான மயிலின் தோகைகளை கொத்து, கொத்தாக வைத்துக்கொண்டு கூவி, கூவி விற்று வருகின்றனர். இதனால் நாட்டின் தேசிய பறவை அழிக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகளவில் ஒவ்வொரு நாட்டுக்கும் தேசிய விலங்கு, தேசிய பறவை, தேசிய பூ என்று அடையாளப்படுத்தி உள்ளனர். அந்த வகையில் இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்றும், தேசிய பறவை மயில் என்றும், தேசிய பூ தாமரை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விலங்கான புலி, தேசிய பறவையான மயிலை வேட்டையாடினாலோ அல்லது அவைகளை பிடித்து விற்பனை செய்தாலே கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆனால் சமீப காலமாக தோல், நகம், பற்களுக்காக அதிகளவில் புலிகள் கொல்லப்பட்டு வருகிறது. இந்தியளவில் புலிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தேசிய புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்த வகையில், புலிகள் போல் தேசிய பறவையான மயிலும் சமீப காலமாக அதிகளவில் அழிக்கப்பட்டு வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது எங்கு பார்த்தாலும் மயில் தோகைகளில் பல்வேறு விதமான பொருட்கள் செய்து விற்பனை செய்து வருகின்றனர். மயில் தோகைகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் எல்லாம், இறந்துபோன மயிலின் தோகையில் இருந்து தயாரிக்கப்படுகிறதா? அல்லது நல்லநிலையில் உள்ள மயில்களை கொன்றுவிட்டு, அதன் தோகையில் பொருட்கள் தயாரிக்கப்படுகிறதா? என்ற ேகள்வி எழுந்துள்ளது. சேலத்தில் வட மாநிலத்தினர், மயில்தோகையால் செய்யப்பட்ட விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கூவி, கூவி விற்பனை செய்து வருகின்றனர். அதே போல் தோகைகளும் கொத்துக் கொத்தாக விற்பனை செய்யப்படுகிறது.  இது குறித்து இயற்கை உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘முன்பெல்லாம் அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே மயில்களை காணமுடியும். அதைவிட்டால் குன்றுகளில் உள்ள சில கோயில்களிலும், உயிரியல் பூங்காக்களிலும் காணலாம். அதன்பிறகு வயல்வெளிகள், கிராமங்களில் உள்ள சமவெளிகள் மயில்கள் உலவி வந்தது. தற்போது ஒரு சில நேரங்களில் நகரப்பகுதிகளில் கூட, மயில்களின் நடமாட்டத்தை காண முடிகிறது. இது ஒரு புறமிருக்க மயில்தோகையானது ஏதோ சாக்லெட் விற்பது போல் சர்வ சாதாரணமாக விற்கப்படுகிறது. இப்படி அதிகப்படியான தோகைகள் எங்கிருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேசிய விலங்கின் எண்ணிக்கை குறைந்தது போல், தேசிய பறவையின் எண்ணிக்கையும் குறைந்து போகும்,’’ என்றனர்.

Related Stories: