தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு கோவையை சேர்ந்த 3 பேரிடம் விசாரணை

கோவை: கோவை கரும்புக்கடை  பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன் (28), உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்தவர் பைசல்  ரகுமான் (29). இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகளை  சேர்ந்தவர்களுடன் நட்பை ஏற்படுத்தி தொடர்பில் இருப்பதாக பெரிய கடைவீதி போலீசாருக்கு தகவல்  கிடைத்தது. போலீசார் நேற்று காலை சதாம் உசேன், பைசல் ரகுமான் வீடுகளில்  சோதனை நடத்தினர். இவர்கள் பயன்படுத்திய 2 செல்போன், 2 லேப்டாப், பென்டிரைவ் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்த சதி திட்டம் தீட்டியது, சமூக வலைதளங்களில் ஆட்சேப கருத்துக்களை பதிவு செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களை போலீசார் அவினாசி ரோட்டில்  உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 3 ஆண்டிற்கு  முன் உக்கடத்தில் திராவிடர் விடுதலை கழக நிர்வாகி பாரூக் (28) என்பவர்  வெட்டி கொல்லப்பட்டார். கடவுள் மறுப்பு கொள்கையை பேஸ்புக்கில் இவர்  வெளியிட்டதால் கொலை செய்யப்பட்டார். பரபரப்பு ஏற்படுத்திய இந்த வழக்கில்,  சதாம் உசேன் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார். போலீசார் இவரை கைது  செய்து கோவை சிறையில் அடைத்தனர். சதாம் உசேன் சில மாதத்துக்கு முன் ஜாமீனில்  வெளியே வந்தார். இவர் பேஸ்புக்கில் பல்வேறு ஆட்சேப கருத்துக்களை  தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல்  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தை கொலை செய்ய முயன்ற வழக்கில்  கைதான பைசல் ரகுமான் சிறையில் இருந்து ஜாமீனில் வந்தார்.

இவரும் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்தும் வகையிலான சதிகளை நிறைவேற்ற தீவிரம் காட்டி வருவதும், ஆட்சேப கருத்துக்களை பேஸ்புக்கில் பதிவிட்டு வந்ததும் தெரியவந்தது. இவர்கள் பல்வேறு சதி திட்டங்களை அரங்கேற்ற திட்டமிட்டு  செயல்பட்டு வந்தனர் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இவர்களை விரைவில் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதேபோல் பெங்களூரை பூர்வீகமாக கொண்ட  பீளமேட்டில் வசிக்கும் முகமது புர்கான் (27)  என்பவர் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். அவரிடமும்  விசாரணை நடத்தப்பட்டது.

Related Stories: