கல்லூரிகளில் இந்தி கட்டாய பாடம் பாஜ அரசுக்கு முத்தரசன் கண்டனம்

சென்னை: கல்லூரிகளில் இந்தி கட்டாயப் பாடம் ஆக்கப்படும் என்ற அறிவிப்புக்கு முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  மத்தியில் அமைந்துள்ள பாஜ ஆட்சி இந்தி மொழியை, இந்தியே பேசாத மாநில மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணித்திட தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவது கடும் கண்டனத்துக்குரியது. தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்தது. மும்மொழிக் கொள்கை என்ற பெயரால் இந்தியை திணிக்கும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

 தற்போது பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கல்லூரிகளில் இந்தியை கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்று கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு குறித்து சிறிதும் கவலைப்படாத பாஜ அரசு தனது சொந்த விருப்பத்தை நிறைவேற்ற முயல்வது விபரீதங்களை உருவாக்கும்.  பல்கலைக்கழக மானியக்குழு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: