வேலூர், காட்பாடியில் 43 ஆண்டுகளாக மகாத்மா காந்தி வேடத்தில் பிச்சை எடுத்தவர் மீட்பு

வேலூர்: வேலூர், காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் முதியவர் ஒருவர் உடல் முழுவதும் சில்வர் பெயிண்ட் பூசிக்கொண்டு, இடுப்பில் வேட்டியுடன், கண்ணில் கண்ணாடி அணிந்தபடி, ஊன்றுகோலுடன் தேசத்தந்தை மகாத்மா காந்தி வேடத்தில் ஆங்காங்கே நின்றுகொண்டு இருப்பார். ஆனால் யாரிடமும் பிச்சை கேட்கமாட்டார். இவர் காந்தியைபோல் நின்றுகொண்டு கையில் தட்டு வைத்திருந்ததால் அவ்வழியாக செல்பவர்கள் தானாகவே காசு வழங்குவார்கள். இவ்வாறு 43 ஆண்டுகளாக இப்பகுதிகளில் பிச்சை எடுத்து வந்தார். இதேபோல் நேற்று காட்பாடி அருகே சாலையோரம் நின்றுகொண்டு இருந்தார்.  இதையறிந்த காட்பாடி இன்ஸ்பெக்டர் புகழ் அறிவுறுத்தலின்பேரில், எஸ்ஐ மனோகரன், எஸ்எஸ்ஐகள் முத்துகுமார், பாபு ஆகியோர் அவரை மீட்டு உணவு கொடுத்துவிட்டு விசாரித்தனர்.

விசாரணையில் அவர் ஐதராபாத்தை சேர்ந்த சையத்பாஷா(87). இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 43 ஆண்டுகளுக்கு முன் ரயில் மூலம் காட்பாடி வந்துள்ளார். இப்பகுதிகளில் தனது உடல் முழுவதும் சில்வர் கலர் பெயிண்ட் அடித்துக்கொண்டு காந்தி வேடத்தில் பிச்சை எடுத்து வயிற்றுப்பசியை போக்கி வந்துள்ளார் என தெரிய வந்தது. இதுகுறித்து காட்பாடி போலீசார் கூறுகையில், காந்தி வேடத்தில் சாலையோரங்களில் நின்று பிச்சை எடுத்தவர் விபத்தில் சிக்க கூடும் என்பதால் அவரை, மீட்டு கிளித்தான்பட்டறையில் உள்ள ஒருவரது வீட்டில் வாடகைக்கு தங்க வைத்துள்ளோம். தொண்டு நிறுவனங்களிடம் நிதி உதவி கேட்டுள்ளோம். மீண்டும் அவரை காந்தி வேடமிட்டு பிச்சை எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம்’ என்றனர்.

Related Stories: