ஊழல் நிறைந்த அதிமுக ஆட்சி இருக்கும் வரை தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க முடியாது: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: ஊழல் நிறைந்த அதிமுக ஆட்சி இருக்கும் வரை தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க முடியாது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  

  தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியிருக்கிறது என்கிற உண்மையை அதிமுகவினரால் மறைக்க  முடியாது.  தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 14 துப்புரவு பணிக்காக 4600 மனுக்கள் வந்துள்ளன.

இதில் பொறியியல் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பல தகுதிமிக்க இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.  இத்தகைய அவலநிலையில் உள்ள தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்று சொல்வதை விட ஒரு  அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது. தமிழகத்தில் நகரங்களில் 58.80 சதவீதமும், கிராமப்புறங்களில் 41.19 சதவீதமும் வேலையில்லா திண்டாட்டம் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.   தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்கிற வரை முதலீடு வருவதற்கோ, தொழில் தொடங்குவதற்கோ, வேலைவாய்ப்பு பெருகுவதற்கோ எந்த வாய்ப்பும் ஏற்படப் போவதில்லை. வேலையில்லா திண்டாட்டத்தை போக்க முடியாத அதிமுக அரசு  எப்போது ஆட்சியில் இருந்து அகற்றப்படுகிறதோ, அன்றைக்குத் தான் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணத்தை தொடங்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: