நள்ளிரவில் கோயிலின் ஓட்டை பிரித்து 200 ஆண்டுகள் பழமையான சுவாமி சிலைகள் திருட்டு

வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த ஏ.குமாரபாளையத்தில் நள்ளிரவு கோயிலின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள், 200 ஆண்டுகள் பழமையான 3 சுவாமி சிலைகளை திருடிச்சென்றனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள ஏ.குமாரபாளையம்போயர்  தெருவில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான சென்னப்பன், ஆதிலட்சுமி,  துளசிலட்சுமி சுவாமி கோயில் அமைந்துள்ளது. சாதாரண வில்லை ஓட்டு  கட்டிடத்தில் உள்ள இந்த கோயிலில்  2 அடி உயரமுள்ள 3 சிலைகள் உள்ளன.  இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், கோயிலின்  ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம  நபர்கள், 3 சுவாமி சிலைகளையும் திருடிச் சென்று விட்டனர்.

மறுநாள் சுவாமி சிலைகளை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள், இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில், ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரின்  மையப்பகுதியில் உள்ள இந்த கோயிலில், பஞ்சலோக சிலைகள் இருந்திருக்கலாம் என  கூறப்படுகிறது. சிலை குறித்த தகவல் அறிந்தவர்களே, இந்த திருட்டில்  ஈடுபட்டிருக்க கூடும். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆத்தூர் அருகே  உள்ள அம்மம்பாளையம் பகுதியில் சிலை கடத்தல் கும்பல் உள்ளது தெரியவந்ததை  அடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிலரிடம் விசாரணை மேற்கெண்டு  வருகின்றனர்.

Related Stories: