மகளின் உருவத்தை கிண்டல் செய்த மாணவனுக்கு ஸ்மிருதி இரானி செம டோஸ்: நீக்கிய செல்பியை மீண்டும் வெளியிட்டு பெருமிதம்

புதுடெல்லி: மகளுடன் தான் எடுத்த செல்பியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதை கிண்டல் செய்த மாணவனுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நாசுக்காகவும், அதே நேரம் கடுமையாகவும் விமர்சித்துள்ளார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் ஸ்மிருதி இரானி. தொலைக்காட்சி நடிகையாக இருந்து அரசியல்வாதியாக உயர்ந்தவர்.

இவரது மகள் ஜோயிஷ் இரானி. பள்ளியில் படித்து வரும் இவருடன் அமைச்சர் ஸ்மிருதி இரானி எடுத்த செல்பி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதை பார்த்த ஜோயிஷின் வகுப்புத் தோழன் ஜா, ஜோயிஷின் உருவத்தை கிண்டல் செய்துள்ளான். இது ஜோயிஷை வேதனை அடையச் செய்து விட்டது. இதனால், இன்ஸ்டாகிராமில் இருந்து அந்த படத்தை நீக்குமாறு தாயிடம் ஜோயிஷ் கோரிக்கை விடுத்தார்.

 

மகள் கண்ணீருடன் விடுத்த கோரிக்கையை ஏற்ற ஸ்மிருதி இரானி, அந்த செல்பியை நீக்கினார். பின்னர், அதை மீண்டும் பதிவிட்டார். அதோடு, அதன் அடியில் தனது மகளை கிண்டல் செய்த வகுப்பு தோழர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் நாசுக்கான, அதே நேரம் மிகவும் கடுமையான பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.

தனது பதிவில் அவர், ‘புகைப்படத்தை அகற்றிய பிறகுதான் எனக்கு ஒரு உண்மை புலப்பட்டது. படத்தை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியதால் அந்த முட்டாள் சொன்னது உண்மையாகி விடுமே என கருதி மீண்டும் அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளேன். மிஸ்டர் ஜா... எனது மகள் ஜோயிஷ் சிறந்த விளையாட்டு வீராங்கனை. லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தவர்.

கராத்தேவில் கருப்பு பெல்ட் பட்டம் பெற்றவர். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 2 முறை வெண்கலப் பதக்கம் பெற்றவர். அவர் என் அன்பான மகள் மட்டுமல்ல; அழகான மகளும் கூட. உருவத்தை கேலி செய்யாதீர்கள். மற்ற எதை கிண்டல் அடித்தாலும் அவள் சமாளிப்பாள்,’ என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தாயாக ஸ்மிருதி இரானியின் பாசம் இந்த பதிவில் வெளியாகி இருப்பது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இதை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ‘லைக்’ செய்துள்ளனர்.

Related Stories: