ஐகோர்ட் நீதிபதிகள் ஓய்வு வயதை 65 ஆக்க வேண்டும்: பிரதமருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடிதம்

புதுடெல்லி: ‘‘உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதையும் 65 ஆக உயர்த்த வேண்டும்’’ என பிரதமர் மோடிக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 3 கடிதங்கள் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்றத்தில் 58,669 வழக்குகள் நிலுவையில் உள்ளன. புதிய வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நீதிபதிகள் பற்றாக்குறை காரணமாக, சட்ட சம்பந்தமான முக்கிய வழக்குகளை விசாரிக்கு அரசியல் சாசன அமர்வுகள் தேவையான அளவுக்கு அமைக்க முடியவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போதுதான் 31 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கையை உயர்த்துவது பற்றி நீங்கள் பரிசீலிக்க வேண்டும். அப்போதுதான் உச்ச நீதிமன்றத்தால் திறம்பட செயலாற்ற முடியும். உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை.

உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் ஓய்வு வயதை 62ல் இருந்து 65 ஆக உயர்த்த அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது பற்றி பரிசீலிக்க வேண்டும். உயர் நீதிமன்றங்களில் தற்போது 399 பணியிடங்கள் அதாவது 37 சதவீதம் காலியாக உள்ளன. நீதிபதிகள் பற்றாக்குறையால், அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலுவை வழக்குகளை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போதுள்ள காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: