காங், மேலிடம் செயலிழந்து விட்டதால் கர்நாடகா கூட்டணி அரசு அதிக நாட்கள் நீடிக்காது: தேவகவுடா பரபரப்பு தகவல்

பெங்களூரு: ‘‘கூட்டணி ஆட்சியை பாதுகாக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் டெல்லி மேலிடம் செயலிழந்து விட்டது. எனவே, கர்நாடகாவில் சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் நடக்கும் என்பது தவிர்க்க முடியாதது. அத்துடன், கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி என்பது இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது தெரியாது,’’ என முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார். இதனால், மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.பெங்களூருவில் தனது இல்லத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது: கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.  ஆனால், காங்கிரசார் எத்தனையோ தொல்லைகளை மஜத.வினருக்கு கொடுத்தனர். இவற்றை எல்லாம் சகித்து கொண்டு, காங்கிரஸ் கட்சியின் மேலிடம் இதுபோன்ற பிரச்னைகளை சரிசெய்யும் என நம்பியிருந்தேன்.

ஆனால், கூட்டணி ஆட்சி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டி மோதல்களை சரிசெய்யும் சக்தி அக்கட்சியின் மேலிட தலைவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை. கர்நாடகா காங்கிரசாரை கட்டுப்படுத்தும் சக்தியை அக்கட்சியின் டெல்லி மேலிடம் இழந்துள்ளது.   மேலும் ஆட்சி அதிகாரத்திற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் காங்கிரசாரிடமே வைத்து ெகாண்டுள்ளனர். எனவே, அவர்கள் சொல்படிதான் முதல்வர் குமாரசாமியோ அல்லது மஜத அமைச்சர்களோ நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  இப்படி அனைத்து வகையான கட்டுப்பாடுகளை காங்கிரசார் பறித்துக் ெகாண்டிருப்பதால் மஜதவினருக்கு எந்த நன்மையும் இல்லை.

கர்நாடக காங்கிரசாரை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் அக்கட்சியின் மேலிடம் செயல் இழந்துள்ளதால், சட்டப்பேரவைக்கான தேர்தல் நடக்கும் என்பதை யாராலும் தடுக்க முடியாது. இதனால் கர்நாடகாவில் நடந்துவரும் கூட்டணி ஆட்சி என்பது எத்தனை நாட்களுக்கு இருக்கும் என்பதை யாராலும் உறுதியுடன் கூற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.  தேவகவுடாவின் இந்த அதிரடி அறிவிப்பு காங்கிரசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: