இருதரப்பு உறவை பலப்படுத்தும் வகையில் சீன அதிபர் ஜின்பிங் வடகொரியா பயணம்

பியாங்யாங்: வடகொரியாவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வடகொரியா அடிக்கடி அணு ஆயுதங்கள், ஏவுகணை சோதனை நடத்தியதால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன் இடையே 2 கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.  இதில், வியட்நாமில் கடந்த பிப்ரவரியில் நடந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தை, எந்த முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று முன்தினம் 2 நாள் பயணமாக தனது நெருங்–்கிய நட்பு நாடான வடகொரியாவுக்கு சென்றார். முன்னதாக, கிம் சீனாவுக்கு 3 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், சீன அதிபர் வடகொரியாவுக்கு 14 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் சென்றுள்ளார்.

சீன அதிபரை நேற்று முன்தினம் விமான நிலையம் அருகே 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வரவேற்றனர். திறந்த காரில் நின்றபடி சென்ற ஜின்பிங்கையும், கிம்ஜோங்கையும் பியாங்கியாங்கில் மக்கள் இருநாட்டு கொடிகளை அசைத்து வரவேற்றனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் கூறுகையில், ‘`தங்கள் பயணம் வடகொரியா-  சீனா நட்பு என்பது, மாற்ற முடியாத, வெல்ல முடியாத நட்பு என்பதை உலகுக்கு காட்டுவதாக அமைந்துள்ளது,’’ என்றார்.

வடகொரியா அதிபர் கிம்ஜோங்குக்கும், சீன அதிபர் ஜின்பிங்குக்கும் உள்ள நெருக்கத்தை அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எடுத்து காட்டுவதாக இந்த பயணம் அமையும் என்றும், இருதரப்பு உறவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

Related Stories: