தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை; சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் பிரச்சனை நிலவி வருகிறது. கோடை காலத்தில்  பெய்ய வேண்டிய மழையும் பெய்யாததால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இந்தாண்டு சென்னையில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீருக்காக மக்கள் தவித்து வருகின்றனர். டேங்கர் லாரிகளுக்கு  கூடுதல் பணம் கொடுப்பதாக கூறினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. காரணம் , நீர் நிலைகள் முற்றிலும் வறண்டுவிட்டது. சென்னையில் பெருகிவிட்ட ஐடி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்றுமாறு  அறிவுறுத்திவிட்டனர். மேலும் பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழக மக்களும் தண்ணீருக்காக அலைய கூடிய சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  வடக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அடுத்த சில நாட்களில் தென் மேற்கு பருவமழை வலுப்பெறும், என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  தற்போது, இந்தியாவின் 15 சதவீத இடங்களில் மட்டுமே, பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளதாகவும், இது வழக்கத்தை விட குறைவு எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. கேரளா, கர்நாடகாவின் தென்பகுதி மற்றும், தமிழகத்தின் சில  பகுதிகளில் மட்டுமே பெய்துவரும் மழை, மற்ற இடங்களுக்கும் பரவ, இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மஹாராஷ்டிராவில், வரும் 25ம் தேதி வாக்கிலும், நாட்டின் மத்திய  பகுதிகளில் ஜூன் கடைசி வாரத்திலும் மழையை எதிர்பார்க்கலாம் எனவும், வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை:

தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி வரும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அருணகிரிசத்திரம், சேவூர், அவுசிங்போர்டு,மற்றும் பையூர் ஆகிய இடங்களில் மிதமான  மழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம், கும்பகரை, வடுகபட்டி, முருகமலை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. மழையால்  பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பெரம்பலூரில் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் துறைமங்கலம், நான்கு ரோடு ஆகிய இடங்களில் அரை மணி நேரம் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம்  அதிகமாக இருந்த நிலையில் திடீரென பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி காணப்பட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: