பழுதான பைப்லைனை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் தர்ணா: திருவொற்றியூரில் பரபரப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பழுதான பைப்லைனை சரி செய்யாததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திருவொற்றியூர் கிராம தெருவில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. மூன்று அடுக்குகள் கொண்ட இந்த குடியிருப்பில் 336 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில், பொது குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

 இந்நிலையில் பல மாதங்களுக்கு முன், இங்குள்ள பைப்லைன் பல இடங்களில் உடைந்ததால் குடிநீர் வீணாவதோடு, பொதுமக்கள் குடிநீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, உடைந்த பைப்லைனை அகற்றிவிட்டு, புதிய பைப்லைன் அமைக்க திருவொற்றியூர் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டனர். அதுவரை தற்காலிகமாக லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.  ஆனால் இதுவரை பணிகளை தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முதியவர்கள், பெண்கள் ஆகியோர் லாரிகளில் வழங்கப்படும் குடிநீரை குடங்களில் பிடித்து மாடிக்கு எடுத்துச் செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு குடங்களில் குடிநீரை பிடித்து மாடிக்கு எடுத்துச் செல்லும் போது கர்ப்பிணி பெண்கள் மற்றும் சிறுமிகள் கால் இடறி விழுந்து காயமடைகின்றனர். எனவே, உடைந்த பைப்லைனை விரைந்து சீரமைக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் பலமுறை குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.     மேலும் லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரும் போதிய அளவுக்கு இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பைப்லைனை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து இப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை காலி குடங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், வெகு நேரமாகியும் அதிகாரிகள்  யாரும் நேரில் வராததால், அவர்களை கண்டித்து கோஷமிட்டு பின்னர் கலைந்து சென்றனர்.   இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,   ‘‘இந்த அடுக்குமாடி குடியிருப்பில் குப்பைகளை முறையாக அகற்றுவது கிடையாது. தெருவிளக்கும் சரியாக எரிவதில்லை. குடிநீர் குழாய்கள் பல மாதங்களாக பழுதாகி கிடைக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் லாரிகளில் வரும் குடிநீரை எப்படி குடங்களில் எடுத்து மாடிக்கு செல்ல முடியும். தொண்டு நிறுவனம் மூலம்  நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்  பொருத்தப்பட்டது. அதை அதிகாரிகள் பராமரிக்காததால் பழுதாகி உள்ளது. விரைவில் புதிய பைப்லைனை பதித்து, குடிநீர் வழங்காவிடில் மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்,’’ என்றனர்.

Related Stories: