‘அம்மா ஆசிரமம்’ என்ற போலி பெயரில் 30 பெண்களை பணியில் அமர்த்தி பல லட்சம் மோசடி செய்தவருக்கு வலை

* 12 லட்சத்தை சுருட்டியதால் அம்பலம்

* பழைய துணி வாங்கி விற்று பணமாக்கினார்
Advertising
Advertising

சென்னை: அம்மா ஆசிரமம் என்ற பெயரில் போலி அனாதை இல்லம் தொடங்கி இளம் பெண்களை பணியில் அமர்த்தி சென்னை முழுவதும் பல லட்சம் நிதி பெற்று மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சுசிலா(45). இவர் ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் ஒருவர் வீட்டில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டிற்கு கடந்த வாரம் 2 இளம் பெண்கள் வந்து, நாங்கள் அம்மா ஆசிரமத்தில் இருந்து  வருகிறோம். அனாதை குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த நிதி உதவி அல்லது பழைய துணிகள் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது வீட்டில்  இருந்த சுசிலாவின் மகன் தனது அம்மா கட்டி வைத்திருந்த பழைய துணி மூட்டையை எடுத்து கொடுத்துள்ளார். அதை எடுத்து கொண்டு அந்த இளம் பெண்கள் அனாதை ஆசிரமத்தின் துண்டு சீட்டை கொடுத்துள்ளனர். பின்னர் பழைய துணி மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை பார்த்து அப்படியே மூட்டையை எடுத்துக் கொண்டு தப்பி தலைமறைவாகிவிட்டனர்.

அப்போதுதான் ெவளியே ெசன்று இருந்து சுசிலா வீட்டிற்கு வந்து தனது பழைய துணிமூட்டை எங்கே என்று தனது மகனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் நடந்த சம்பவத்தை கூறியதும் சுசிலா  அதிர்ச்சியடைந்தார். வீடு புதுப்பிப்பதற்காக  வங்கியில் லோன் பெற்ற ₹12 லட்சம் திருடுபோகாமல் இருப்பதற்காக பழைய துணியில் மூட்டையாக கட்டி பாதுகாப்பாக வைத்திருந்ததாக தன் மகனிடம் கூறினார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன் இளம் பெண்கள் கொடுத்த துண்டு சீட்டில் இருந்த ஆசிரம முகவரியை பார்த்த போது, ஊத்துக்கோட்டையில் ‘அம்மா ஆசிரமம்’ இயங்குவதாக கூறப்பட்டிருந்தது. அதன்படி சுசிலாவின் மகன் ஊத்துக்கோட்டைக்கு சென்று பார்த்த போது அங்கு அம்மா ஆசிரமம் என்ற பெயரில் எந்த அனாதை ஆசிரமமும் இயங்க வில்லை என்று தெரியவந்தது.

உடனே சம்பவம் குறித்து சுசிலா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, சென்னை புழலை சேர்ந்த அரவிந்தன்(38) என்பவர் ‘அம்மா ஆசிரமம்’ என்ற பெயரில் போலியாக ஆசிரமம் தொடங்கி அதற்கு நிதி மற்றும் பழைய துணிகள் வாங்கும் வகையில் 20 முதல் 30 இளம் பெண்களை மாத ஊதியத்தில்  பணியில் அமர்த்தி சென்னை முழுவதும் வீடுகளில் பணம் மற்றும் பழைய துணிகளை வசூலித்து வந்தது தெரியவந்தது. அப்படி வாங்கும் பழைய துணிகளை செங்குன்றத்தில் உள்ள பழைய துணிகள் வாங்கும் நிறுவனத்தில் விற்பனை செய்து  அதில் வரும் பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், சுசிலா வீட்டில் இருந்து எடுத்து சென்ற ₹12 லட்சம் பணத்தையும் அவர்கள் எடுத்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து தகவல்  அறிந்த போலி ஆசிரமம் நடத்திய வந்த அரவிந்தன் தலைமறைவாகிவிட்டார்.

அரவிந்தன் தோழியான மகாலட்சுமியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அரவிந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: